அனோஜனைக் காப்பாற்ற மோடியின் உதவியை நாடுங்கள்! – மனோ கணேசன் எம்பி வேண்டுகோள்
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சவூதி முடிசூட்டு இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளார். இலங்கையின் உயரிய குடிமகன் விருதான ‘ஸ்ரீலங்கா ரத்னா’ விருதைப் பெற்ற நரேந்திர மோடி, இலங்கையின் நீண்டகால நண்பராகவும் விளங்குகின்றார்.
இலங்கையின் ‘ஸ்ரீலங்கா ரத்னா’ விருதைப் பெற்ற உங்கள் நண்பரான பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குச் சிவராசா அனோஜனின் மிகவும் ஆபத்தான நிலையைக் அவசரமாகக் கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.