சகல எதிர்க்கட்சிகளும் உரிய தருணத்தில் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து களமிறங்கும்.!
இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாகச் செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான பிளவு அல்ல என்றும், , உரிய தருணத்தில் அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து களமிறங்கும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடனான உத்தியோகபூர்வ கூட்டணி குறித்த இறுதித் தீர்மானம் அடுத்த தேசிய தேர்தலின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட அனுராதபுரம் பேரணியானது, தற்போதைய அரசின் தோல்விகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது. உறங்கிக் கொண்டிருந்த மக்களை மீண்டும் விழிப்படையச் செய்து, அவர்களின் போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய ஒரு முக்கியமான பேரணியாகவே அதனைப் பார்க்க முடிகின்றது.
இதன் தொடர்ச்சியாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அரசுக்கு எதிராகத் தனியாகப் பல போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்மாத இறுதியில் கொழும்பில் பிரம்மாண்டமான முறையில் ஒன்றுகூடி, முக்கிய கலந்துரையாடல்களையும் பேரணிகளையும் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உள்ள பல்வேறு அரசியல் இயக்கங்கள் இணைந்து தற்போது கூட்டு எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகள் தனித்தனியாக மக்கள் சந்திப்புகளை நடத்துவதைப் பார்த்து அவை பிளவுபட்டுள்ளதாகச் சிலர் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. ஒவ்வொரு கட்சியும் தத்தமது பலத்துக்கு ஏற்ப மக்களைத் திரட்டுவது அரசியல் ரீதியாக இயல்பான ஒரு விடயமாகும். எனினும், அரசுக்கு எதிராக இறுதிச் சந்தர்ப்பம் வரும்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகவே கைகோர்த்து களமிறங்கும்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது குறித்து நீண்டகாலமாகப் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரு கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் முக்கிய குழுவினர் பலமுறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். ஏற்கனவே உள்ளூராட்சி மன்ற அமைப்புகளின் தேர்தல்களின்போது இரு கட்சிகளும் அடிமட்ட அளவில் இணைந்து செயற்பட்டது போல், தற்போதும் ஆதரவாளர்கள் மத்தியில் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி நல்லிணக்கம் தொடர்கின்றது.
இரு கட்சிகளும் எப்போது உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கப் போகின்றன என்பதை இரு கட்சித் தலைவர்களுமே உரிய நேரத்தில் தீர்மானிப்பார்கள்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்திலோ அல்லது அடுத்த தேசிய தேர்தல் வரவிருக்கும் சந்தர்ப்பத்திலோ இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிப்படுத்தப்படும்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவராக இன்னமும் மஹிந்த ராஜபக்ஷவே தொடர்ந்தும் திகழ்கின்றார். இத்தகைய சிரமங்களுக்கு மத்தியிலும் கூட அவரைப் பேரணிகளுக்கு அழைத்து வருகின்றமை, பொதுமக்களுக்கும் அவருக்குமான பலமான பிணைப்பையே மீண்டும் காட்டுகின்றது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.” – என்றார்.