‘சிரிலிய சவிய’ நிதி முறைகேடு பற்றி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த நடவடிக்கை!
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்குக்கு 10 மில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்துவதற்கு பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரியவருகின்றது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த சிடி ஸ்கேனர் இயந்திரம் பின்னர் சீன அரசால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர், அரச வங்கியொன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி, அந்த இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படாமல் என்ன ஆனது என்பது குறித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று கூறியுள்ளார்.
மருதானை மற்றும் சுதுவெல்ல வங்கி கிளைகளில் பராமரிக்கப்பட்டு வந்த ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்குகளுக்கு, எழுத்துபூர்வமான கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த நிதி மாற்றப்பட்டது என்று வங்கியின் அப்போதைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் அந்த விசாரணை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டுள்ளதுடன், விரைவில் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் பல்வேறு சந்தேகத்துக்குரிய நிதிப் பரிமாற்றங்கள் காணப்படுகின்றன என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதியும் ஷிராந்தி ராஜபக்ஷவிடம் நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.