முற்று முழுதாக கைவிடப்பட்ட கொடித்தோடை செய்கை.!
கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின்(ASMP) கீழ் மேற்கொள்ளப்பட்ட கொடித்தோடை செய்கை முற்று முழுதாக கைவிடப்பட்டுள்ளதுடன் அதற்கென நிறுவப்பட்ட அலுவலகம் குளிரூட்டி மற்றும் உபகரணங்கள் என்பனவும் பயன்பாடு இன்றி காணப்படுகின்றது.
கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சினால் நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் (ASMP)கீழ் விவசாய உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் அந்நிய செலவாணியை நாட்டுக்கு ஈட்டும் வகையிலே உலக வங்கி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் நிதி பங்களிப்பின் கீழ் பலகோடி ரூபாய் செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் உற்பத்தியை மையமாக கொண்டு முதற் கட்டமாக 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ஏழு இலட்சத்து 55ஆயிரம் ரூபாய் பெறுமதியான விவசாய உள்ளீடுகள், நீர் இறைக்கும் இயந்திரம், கொடிகளை கம்பிகள், பராமரிப்பதற்கான நிலம் பண்படுத்தல் என பல்வேறு செயல்திட்டங்களுக்காக வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து மீளவும் 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உள்ளீடுகளும் வழங்கப்பட்டு குறித்த பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன் செய்கை மூலம் கிடைக்கின்ற உற்பத்தியை விவசாயிகளிடம் உரிய விலைகளில் கொள்ளளவு செய்து அவற்றை முடிவு பொருளாக்கி ஏற்றுமதி செய்வதற்குரிய சகல வசதிகளையும் கொண்ட வகையில் அக்கராயன் குளம் பகுதியில் மாகாண விவசாய திணைக்ககளத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியில் 85.11மில்லியன் செலவில் அதற்கான பதப்படுத்தல் நிலையம், அலுவலகம், குளிரூட்டி வசதி என்பன நிறுவப்பட்டு அவையும் இன்று கைவிடப்பட்டு காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
குறித்த திட்டமானது மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஒரு நிதி பங்களிப்பின் கீழான திட்டமாக நிறுவப்பட்ட போதும் இன்று வருமானங்கள் எதுவும் இன்றி இத் திட்டம் முற்று முழுதாகவே கைவிடப்பட்டு காணப்படுகின்றது.
குறிப்பாக முறைகேடான பயனாளிகள் தெரிவு மற்றும் மாகாண விவசாய திணைக்களத்தின் அசமந்த போக்கு என்பன இத்திட்டம் செயலிழக்க காரணமென பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.


