கிளிநொச்சி மாவட்ட சாரணர் கிளை சங்கத்தின் வருடாந்த சாரணர் முகாம்.!
கிளிநொச்சி மாவட்ட சாரணர் கிளை சங்கத்தின் வருடாந்த சாரணர் முகாம் – 2026, கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நேற்று வரை நடைபெற்றுள்ளது. இதன் இறுதி நாளாகிய நேற்று(13) மாலை சாரணிய மாணவர்களின் ஒன்று கூடலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள், பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் சாரணிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மத்திய கல்லூரி மைதானத்தில் சாரண மாவட்ட ஆணையாளர் எஸ்.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் y. ஜெயச்சந்திரன் மற்றும் தேசிய சாரண சங்கத்தின் ஆணையாளர் வட மாகாண ஆணையாளர், மாவட்ட செயலக கணக்காளர், கிளிநொச்சி மாவட்ட சாரணர் கிளை சங்கத்தின் தலைவர் எஸ். பூலோகராஜா, திருகோணமலை மாவட்ட சாரணிய ஆணையாளர் எஸ்.சசிக்குமார், மதத் தலைவர்கள், சாரணிய ஆசிரியர்கள் மற்றும் சாரணிய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் கிளிநொச்சி மாவட்ட சாரணர் கிளை சங்கத்தின் கீழ் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு கல்வி வலயங்களைச் சேர்ந்த சாரணிய மாணவர்களுடன், தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த 15 பாடசாலைகளின் சாரணிய மாணவர்களும் பங்குபற்றியுள்ளனர்.
சாரணிய மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகள், குழு செயற்பாடுகள், ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் திறன்களை மேம்படுத்தும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


