உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 மீலாதுன் நபி விழா.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
161 பார்வைகள்

பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் தொடர்பான புரிதலை மக்களிடையே ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வலிமையான கருவி கல்வியாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 மீலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

சமத்துவத்திற்கு முன்னுரிமை அளித்தல், ஆதரவற்றவர்களைக் கவனித்தல், அடிமைத்தனத்தை ஒழித்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காகக் குரல் கொடுத்த தலைவராக முஹம்மது நபி அவர்கள் கருதப்படுகின்றார். அத்துடன், இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரமான அல்-குர்ஆனையும், முன்மாதிரியான சுன்னாவையும் வழங்கிய மகத்தான போதகராகவும் அவர் வரலாற்றில் போற்றப்படுகின்றார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறியதாவது,
இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களால் மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடப்படும் முஹம்மது நபி அவர்களின் பிறப்பை நினைவுகூரும் மீலாதுன் நபி விழாவில் கலந்துகொள்ள முடிந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

நாம் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களுக்கு முகங்கொடுத்து வரும் உலகில் வாழ்கின்றோம். ஆயுத மோதல்கள் காரணமாக அப்பாவி மக்களின் உயிர்கள் தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்கின்றன. மில்லியன் கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை, குழந்தைகள் வன்முறை, பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், முஹம்மது நபி அவர்களின் போதனைகளும் முன்மாதிரிகளும் இன்றைய உலகிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இலங்கை பல்வேறு இனங்கள், மொழிகள், கலாசாரங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த 21.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட, பன்முகத்தன்மை நிறைந்த வளமான நாடாகும். இந்தப் பன்முகத்தன்மையை இலங்கையின் மிகப் பெரும் பலங்களில் ஒன்றாக எமது அரசாங்கம் கருதுகின்றது. எனவே, ஒவ்வொரு குடிமகனும் சமமான மரியாதையையும், சமமான வாய்ப்புகளையும், பொது சேவைகளுக்குச் சமமான அணுகலையும் அனுபவிக்கக்கூடிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.

சமூக முன்னேற்றத்தையும் சமத்துவத்தையும் அடைவதற்கான மிகவும் வலிமையான கருவி கல்வி என நாம் நம்புகின்றோம். ஒவ்வொரு குழந்தையும் மதிக்கப்படும் அரசாங்கமாக, ஒரு குழந்தையின் குடும்பப் பின்னணி அல்லது சமூக அந்தஸ்து எதுவாக இருந்தாலும், எமது இலவசக் கல்வியின் மூலம் உயர்கல்வி வரை தொடர்ந்து கற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

அத்துடன், எமது பாடசாலைகள் மாணவர்கள் இயன்றவரை ஒருவருடன் ஒருவர் தொடர்பாடி, தமது சொந்தக் கலாசாரத்தை மட்டுமன்றி, ஒருவருடைய கலாசாரத்தை மற்றொருவர் அறிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பளிக்கும் இடங்களாக அமைய வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் எமது இலவசக் கல்விச் சூழலில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் சமூகத்தில் மரியாதையை நிலைநாட்டுவதற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை உருவாக்குவதை நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை, எமது புதிய கல்வி மறுசீரமைப்புகளின் ஊடாக புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, கற்றல் – கற்பித்தல் முறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் சமூகத்தில் நடைமுறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான தன்னம்பிக்கையை மாணவர்களிடையே உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

அதுமட்டுமன்றி, நாம் அனைவரும் நல்லிணக்கத்துடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய சிறந்த சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பங்களிக்கக்கூடிய எதிர்காலக் குடிமகனை உருவாக்குவதும் எமது புதிய கல்வி மறுசீரமைப்பு செயற்பாட்டின் அடிப்படைப் பொறுப்பாகக் கருதப்படுகின்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
கல்வியில் புதியதொரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வரும் இவ்வேளையில், முஹம்மது நபி அவர்கள் எடுத்துக்காட்டிய முன்மாதிரிகள் முக்கியத்துவத்துடன் கருதப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். ஒவ்வொரு குழந்தையும் கல்வியிலிருந்து விலகாமல், அனைவருக்கும் சமமான கல்வி உரிமைகளை வழங்குவதற்காக உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) உள்ளிட்ட விடயங்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகளின் ஊடாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அவர்கள், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். எம். எம். தமீம் அவர்கள், முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் மேஜர் என். டி. நஸுமுத்தீன் அவர்கள் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச விசாரணை கோரி நவம்பர் மாதம் செம்மணியில் மாபெரும் போராட்டம்.!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு –…

1 0 0
இலங்கை செய்திகள்

குத்துச் சண்டைப் போட்டி; வேலாயுதம் மகா வித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை.!

மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட குத்துச் சண்டைப் போட்டியில் வேலாயுதம் மகா வித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. மாவட்டங்களுக்கிடையில் மாகாண ரீதியாக பொலன்னறுவையில் நடாத்தப்பட்ட…

72 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த மகா சங்கத்தை அவமதிக்கும் ஜனாதிபதி; மஹிந்தவை இலக்கு வைத்து அரசியல் பழிவாங்கல்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசானது பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்துடன் முரண்பாடான போக்கைக் கொண்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்தே தனது அனைத்துச்…

67 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தை எவர் மீறினாலும் தண்டனை உறுதி.!

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசு எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்றும், சட்டத்தை எவர் மீறினாலும் அவர்களுக்கான தண்டனை நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்றும் நீதி மற்றும்…

71 0 0