குடியிருப்பு பகுதிக்குள் புகும் யானைகள்; மக்கள் பீதியில்.!
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களை அண்மித்துள்ள விவசாய நிலங்கள், மக்கள் குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளை நோக்கி இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊடுருவுகின்றன. இதனால் விவசாயிகள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமலும், பொதுமக்கள் இரவு வேளைகளில் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யானைகள் தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து வருவதால் மனித உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் சம்பவிப்பதற்கு முன்னர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தலையிட்டுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நேரடியாக வருகை தந்து நிலைமையை ஆராய்ந்து, யானைகள் ஊடுருவுவதைத் தடுக்க நிரந்தரமான நடைமுறைச் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். யானைகள் வழமையாக நடமாடும் பாதைகள் மற்றும் கிராமங்களுக்குள் நுழையும் இடங்களைக் கண்டறிந்து முறையான கண்காணிப்புப் பொறிமுறையை உருவாக்க வேண்டும். அவசர காலங்களில் பொதுமக்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் அவசர உதவிப் பிரிவையும் கண்காணிப்பையும் வலுப்படுத்த வேண்டும்.
மனித உயிரிழப்புகள் அல்லது பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதை விட, அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே முக்கியமானது எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.