உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

2032 ஆம் ஆண்டளவில் இலங்கையைக் கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
55 பார்வைகள்

‘கண்ணிவெடிகளற்ற இலங்கை’ என்ற இலக்கை அடைவதற்கு அரசு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும் மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான செயன்முறைகள் விரைவாக இடம்பெறுவதற்கு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் அர்ப்பணிப்பும் மனிதநேயப் பணியும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கிளிநொச்சி மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள், இதுவரையான முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர், பொறியியலாளர் குமுது லால் போகஹவத்த கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது 21 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று தெரிவித்தார். இதுவரையான கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின்போது பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 20 பணியாளர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்ணிவெடி அகற்றும் பணியின் அபாயத்தையும் அதில் பணியாற்றுவோரின் அர்ப்பணிப்பையும் இது வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் மனிதநேயத்தையும் அர்ப்பணிப்பையும் மனமுவந்து பாராட்டினார். போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தாம் பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட செயலராகப் பணியாற்றியபோது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான மீள்குடியமர்வுச் செயற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வழங்கிய ஒத்துழைப்பை நேரடியாகக் கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான பகுதிகளிலும் தமது உயிரைப் பணயம் வைத்து கண்ணிவெடிகளை அகற்றி, ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பான மீள்குடியமர்வுக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பங்களித்துள்ளனர் என்றும் ஆளுநர் மெச்சினார்.

இதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர் தமது தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், தற்போது வனவளத் திணைக்களத்தின் எல்லைக்குட்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் காணப்படும் பங்கர்களுடன் தொடர்புடைய கண்ணிவெடிகள் இருக்கக்கூடிய வாய்ப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். அவ்வாறான பகுதிகளிலும் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டம் விரைவில் கண்ணிவெடியற்ற மாவட்டமாக அறிவிக்கப்படும் நிலைக்கு முன்னேறி வருகின்றது என்று குறிப்பிட்ட ஆளுநர், 2032ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதற்குத் தேவையான முழுமையான அரச ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, ஊடக சந்திப்பின்போது இலங்கை அரசின் சார்பில் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்துக்கும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஊடகச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலர்கள், வவுனியா மாவட்ட மேலதிக மாவட்ட செயலர், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமலின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும்.!

“நாமல் ராஜபக்ஷவின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும் அல்லது இல்லாமலும் போகலாம்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலஞ்ச, ஊழல் விசாரணை…

24 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைது சட்டவிரோதமானது.!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது பெறப்பட்டதாகக் கூறப்படும் கமிஷன் பணத்தில், 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை நாமல் ராஜபக்ஷ பெற்றார் என்ற குற்றச்சாட்டின்…

40 0 0
இலங்கை செய்திகள்

இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.!

இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி தம்புளுவன, மாரலிய…

54 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.!

அரசின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றதே தவிர, இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வித நன்மையும் பயக்காது என்று மக்கள் போராட்ட…

62 0 0