பாரிய பொய் வழக்கு மற்றும் மோசடி செயல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்.!
வவுனியாவைச் சேர்ந்தவரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான நவநீதன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் பல முறைப்பாடுகள் தினகரனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்தவகையில், இவர் மணல் கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களிடமிருந்து இலஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
அத்துடன், தனது இரவு நேர கடமைகளின் போது பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவர் சட்டவிரோதிகளிடமிருந்து மதுபானங்களை பெற்றுக்கொண்டு, அப்பாவி மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து பின்னர் பிணையில் விடுவிப்பதாகவும், பொலிஸ் அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
அந்தவகையில், அண்மையில் காக்காப்பனிக்கன் பகுதியில் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் கைது செய்யப்பட வேண்டிய ஒருவர் மீது வலுக்கட்டாயமாக ஹெரோயின் போதைப்பொருளை வைத்துக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் சட்டத்தை நிலைநாட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த கூடாது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இவரது இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.