35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!
பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட் ஷஹாபுதீன் (Mohammed Shahabuddin) உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகவே தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 35 ஆண்டுகள் கழித்து இரண்டு வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் 349 நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
தற்போது பிரதமர் தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சிக்கு (BNP) நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது.
இதனால், அவர்களின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் (Mirza Fakhrul Islam Alamgir) ஜனாதிபதியாக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.