உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

எல்நினோவின் தாக்கத்தை எதிர்கொள்ள அரசு இப்போதே தயாராக வேண்டும் – சத்தியலிங்கம் எம்பி ஆலோசனை…!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
123 பார்வைகள்

டித்வா புயல் நேரம்போல் அல்லாது அரசாங்கம் எல்நினோவின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக இப்போதே தயாராக வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை (திருத்தம்)சட்டமூலம் மற்றும் விலங்குகள்(திருத்தச்) சட்ட மூலங்கள் தொடர்பிலான இன்றைய (06.08.2026) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை (திருத்தம்)சட்டமூலம் மற்றும் விலங்குகள்(திருத்தச்) சட்ட மூலங்கள் தொடர்பில் இச்சபையில் விவாதிக்கின்றோம்.

மேற்படி சட்ட திருத்தங்கள் காலத்தின் தேவையாக உள்ளதுடன் திருத்தத்தினூடாக அரச வளங்களை துஸ்பிரயோகம் செய்தலை தடுத்தல், அரச வருமானத்தை அதிகரித்தல் என்பவற்றினூடாக நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் சூழ்நிலையை உருவாக்க முடியும்.

அதேவேளை மிகவும் பழமையான விலங்குச்சட்டத்தை திருத்துவதனூடாக மிருக வதையை தடுப்பதுடன் உயிர்களில் அன்பும் கருணையும் கொண்ட இலங்கையை கட்டியெழுப்பலாம் என நம்புகின்றேன்.

ஏற்கனவே விலங்குகள் சட்டம் இருந்தாலும் அச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கெளரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். ஏனெனில் சட்டவிரோதமாக விலங்குகளை இறைச்சிக்காக கடத்திச்செல்லும் செயற்பாடு இன்றும் தொடர்கிறது.

இதனால் விலங்கு வேளான்மையை நம்பிவாழும் மக்கள் பொருளாதார ரீதியாக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல சட்டத்திற்கு மாறாக விலங்குகள் கடத்திச்செல்லப்படுவதால் தொற்றுநோய்கள் விலங்குகளிடையே பரவ காரணமாகிறது.

இச்சட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய இரண்டு முக்கியமான விடயங்களை முன்மொழிகிறேன். விலங்கு வேளான்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான மேச்சல்தரை ஒதுக்குவது தொடர்பாக சட்டரீதியான தீர்வினை பெற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

வளர்ப்பு விலங்குகளால் ஏற்படும் வீதி விபத்துக்களை குறிப்பாக இரவு நேரங்களில் தடுக்க வளர்ப்பு விலங்குகளின் கழுத்தில் ஒளிரும் பட்டிகளையோ அல்லது பண்ணை விலங்குகளாயின் அவற்றிற்கு காதில் அடையாள பட்டி இடும்போது அவற்றை ஒளிரும் பட்டிகளாக இட சட்ட ஏற்பாடுகளை செய்வதனூடாக உயிரிழப்புகளை தடுக்கலாம்.

கடந்த அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக சிறுபோக நெல் கொள்வனவை நெல் சந்தைப்படுத்தும் சபையூடாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்த அமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது மாவட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடானது 1500 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கே போதுமானதால் இன்னும் 1000 மெற்றிக் தொன் நெல்லை மேலதிகமாக கொள்வனவு செய்ய ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை இன்று காலை அமைச்சர் அவர்களிடம் முன்வைத்தேன்.

அதற்கான ஏற்பாடுகளை செய்ய உறுதியளித்த அமைச்சருக்கு மீண்டும் எனது நன்றிகள்.

இலங்கையில் 88 வீதமான மக்களுக்கு போதிய குடிநீர் ( sufficient) அவர்கள் விரும்பும்போது கிடைப்பதாகவும் 80 வீதமான மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட ( improved )குடிநீர் வசதி கிடைப்பதாகவும் சொல்லப்பட்டாலும் 65 வீதமான மக்கள் நுண்ணுயிரால் மாசுபட்ட ( E-coli contaminated) நீரை பருகுவதாகவும் 2021ம் ஆண்டு தரவுகள் காட்டுகின்றன. ஆனால் தற்போது அந்தநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

அதேவேளை 99 வீதமான மக்கள் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளுடன் வாழ்வதாகவும் அதாவது, மலசலகூட வசதி உள்ளவர்களாகவும் அவர்களில் 94 வீதமானவர்கள் தமக்கான சொந்தமான மலசலகூடங்களை கொண்டுள்ளதாகவும் உள்ளனர். அவ்வாறான நிலையில் ஏன் 65 வீதமானவர்கள் மலக்கழிவு தொற்றுள்ள ( E-coli contaminated) குடிநீரை அருந்துவதாக சொல்லப்படுகிறது?

ஏனெனில், பாவிக்கப்படும் மலசல கூடங்களில் 85 வீதமானவை சாதாரண குழி மலகூடங்களாக உள்ளன, மலக்கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்கான இறுதிக்கழிவகற்றல் முறைமை ( waste management) எமது நாட்டில் காணப்படாமையாகும்.

எனவே மக்களுக்கான சுத்தமான நீரை வழங்குவதற்கும் மலக்கழிவுகளை உரிய முறையில் இறுதிக்கழிவகற்றும் வசதிகளும் மேம்படுத்தப்பட்ட வேண்டும்.

இவ்வாறு இருக்க இன்றும் பாரிய நீர் பற்றாக்குறையுடன் வாழும் மக்கள் எமது நாட்டில் உள்ளனர். குறிப்பாக குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பங்கள் அதிலும் உலர் வலயத்தில் வாழும் மக்கள் இப்பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். எமது பிரதேசங்களில் நீரை பெற்றுக்கொள்ள நீண்ட தூரம் பிரயானம் செய்யவேண்டிய பல குடும்பங்கள் இன்றும் உள்ளனர். எனவே உலர்வலய நீர் வழங்கல் திட்டங்கள் மேம்படுத்தப்படல் வேண்டும்.

கடந்த காலத்தில் பல கோடி நிதியை பயன்படுத்தி அமைக்கப்பட்ட பல சமூக நீர் வழங்கல் திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. எனவே அரசு மீண்டும் அந்த திட்டங்களை புனரமைத்து மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே இலங்கையின் பொது சுகாதார குறிகாட்டிகளை மேம்படுத்த அரசாங்கள் இன்னும் பல முதலீடுகளை செய்யவேண்டியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மிக முக்கியமான ஒரு விடயத்தை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். தற்போது மத்திய பசிபிக் பெருங்கடலில் மிக வலுவான எல்நினோ உருவாகிக்கொண்டுள்ளதாகவும் அது இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதி நோக்கி நகரத்தொடங்கியுள்ளதாகவும் நிபுணர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்கள் தொடர்ச்சியாக இவ்விடயம் குறித்து கருத்துத்தெரிவித்து வருவதை ஊடகங்கள் ஊடாக காணக்கூடியதாக உள்ளது.

ஆரம்பத்தில் எதிர்பார்த்ததற்கு மாறாக எல்நினோவின் உச்சம் முன்கூட்டியே புரட்டாதி மாதத்தின் பிற்பகுதியில் ஆரம்பிக்கும் என்றும் 2027 ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

இதன் காரணமாக இலங்கையில் இரண்டு வேறுபட்ட தீவிர வானிலைத் தோற்றப்பாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஒன்று, புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதி வரை வெப்ப அதிகரிப்பு காணப்படுவதுடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மிகக்குறைந்த மழை வீழ்ச்சியும் சில பகுதிகளுக்கு பெரும் நீர்த்தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் அதிக தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் தாழமுக்கங்கள் புயல்களாக உருவாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் சராசரியை விட அதிகம் மழை, குறைந்த மழை நாட்களில் கிடைக்குமென்றும் மழை வீட்சியானது 900 மி.மீ. இனை விட அதிகமாக கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும்
இதனால் வெள்ள அனர்த்தங்களை உருவாக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

ஆகவே எமது நாட்டில் அதிக வெப்பநிலை, மிக வரண்ட வானிலை மற்றும் வரட்சியும் அதேவேளை புயல்கள், குறுகிய நாட்களில் கிடைக்கும் கனமழை காரணமாக ஏற்படும் வெள்ள அனர்த்தங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே மேற்படி இரண்டு விடயங்களுக்கும் எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும்.

கடந்த 2025, நவம்பர் மாதம் 26ம் திகதி இந்து சமுத்திர வெப்பநிலை அதிகரித்தமையே ‘டிட்வா’ புயல் உருவாக காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இம்முறை எல்நினோவின் காரணமாக இந்து சமுத்திர வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகவே இது தொடர்பாக நாம் அவதானமாக இருப்பது அவசியம்.

ஆனால் எமது நாட்டில் எந்த அளவில் தயார்ப்படுத்தல்கள் உள்ளது? போதிய நிதி, ஆளணி தயார்ப்படுத்தல்கள் நடைபெறுகிறதா? என சம்மந்தப்பட்ட அமைச்சுக்களை கேட்க விரும்புகிறேன்.

டித்வா அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார நட்டத்தில் இருந்து நாடு மீளாத நிலையில் மீண்டும் பாரிய அனர்த்தம் ஒன்றை தாங்கும் சக்தி மக்களுக்கோ அரசுக்கோ இல்லை. எனவே முற்கூட்டிய பேரழிவுத் தடுப்பு தயார்ப்படுத்தல்களை செய்வதனூடாக அழிவின் தாக்கத்தை குறைக்கும் வாய்ப்புள்ளது.

இன்றும் பல இடங்களில் மழை நீர் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. ஆகவே ஆக்கிரமிப்புகளை நீக்கி மழைநீர் வழிந்தோடுவதற்கான செயற்பாட்டினை சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் செய்வதை உறுதிப்படுத்துவதுடன் அதற்கான நிதி மற்றும் ஏனைய வளங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

53 0 0