கடந்த கால படுகொ*லைகளில் இருந்து வேறுபடுகின்றது நீர்கொழும்பு கலவரம்.!
கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளைப் படுகொலை செய்வதற்காகவே அரசினால் திட்டமிட்டு, அதிகாரிகளின் துணையுடன் அரங்கேற்றப்பட்ட வெலிக்கடை, பிந்துனுவேவா மற்றும் களுத்துறை சிறைக்கலவரங்களிலிருந்து, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் முற்றிலும் வேறுபட்டது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனது உரையில் அவர் மேலும் கூறியதாவது,
“கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம், தற்போதைய அரசின் காவல் மற்றும் சிறைச்சாலை கட்டமைப்பின் தரநிலையை உலகுக்கு மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இலங்கையின் சிறைச்சாலைகளில் இதற்கு முன்னரும் பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளால் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகளே அறைக் கதவுகளின் திறப்புகளைக் குற்றவாளிகளுக்குக் கையளித்தமை தப்பிப்பிழைத்தவர்களின் வாக்குமூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
அதேபோல், 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாமில் 27 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அரசின் நேரடித் திட்டமிடலுடன் இடம்பெற்ற ஒன்றாகும்.
இத்தகைய கடந்தகாலச் சம்பவங்கள் அரசால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புத் தாக்குதல்களாகவே கருதப்படுகின்றன. ஆனால், அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைக்கலவரம் அத்தகைய திட்டமிட்ட படுகொலைகளிலிருந்து வேறுபடுகின்றது. இது தற்போதுள்ள அரச கட்டமைப்பின் மனிதநேயமற்ற மற்றும் வினைத்திறனற்ற காவல் நிர்வாகத்தையே உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.
வெலிக்கடை, பிந்துனுவேவா மற்றும் களுத்துறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அன்று இழைக்கப்பட்ட அநீதி போன்றல்லாது, நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காவது உரிய நீதி கிடைக்க வேண்டும் என நான் கோருகின்றேன்.” – என்று அவர் வலியுறுத்தினார்.