தொல்லியல் திணைக்களம் அதிக அதிகாரத்தை கொண்டது.!
தொல்லியல் திணைக்களம் அதிக அதிகாரத்தை கொண்ட திணைகளங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்தது.
தொல்பொருள் பரிசோதனைகள் மற்றும் வழக்குகள் மூலம் வசூலிக்கப்படும் அபராதப் பணத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் 80 வீதத்தை தகவல் வழங்குனருக்கும் அதிகாரிகளுக்கும் வெகுமதியாக கொடுக்கலாம் எனும் திருத்தத்தை இன்று கொண்டுவருகிறீர்கள்.
இவ்விடயத்தில் எமக்கு மாற்றுக்கருத்துள்ளது. இதில் உள்நோக்கம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இவ்வகையான வெகுமதிகள் அனைத்து திணைக்கள ஊழியர்களுக்கும் கொடுக்கப்படுகிறதா?
கடமையை சிறப்பாகச் செய்யும் ஏனைய அரச திணைக்கள ஊழியர்களுக்கு ஏன் பாரபட்சம் காட்டவேண்டும்?
தற்போது வாழ்க்கை செலவு அதிகம், அதை ஈடுசெய்ய அரச ஊழியர்களுக்கான வேதனத்தை கூட்டினால் வரவேற்போம்.
இப்போதுள்ள தொல்லியல் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என நினைக்கின்றேன்.
தொல்லியல் சட்டம் இந்த நாட்டிற்கானது. ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, மதத்திற்கோ ஆனதாக இருக்கமுடியாது.
ஆனால் எமது நாட்டில் இச்சட்டமானது ஒரு பிரிவினருக்கானது என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது. குறிப்பாக எண்ணிக்கையில் சிறுபான்மையான இனமக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அவ்வாறு அவர்கள் சிந்திப்பதற்கான காரணங்கள் உள்ளது.
அதை நிவர்த்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு இந்த சபைக்குள்ளது.
தொல்லியல் திணைக்களத்தினுடைய அதிகாரங்கள் எவை என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பல கேள்விகள் ஐயங்கள் உள்ளது.
அப்படியாக ஐயம் வருவதற்கு காரணமாக இங்கு ஒரு சம்பவத்தை நினைவுகூரலாம் என எண்ணுகிறேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்துடன் தொடர்புபட்ட சம்பவங்களை குறிப்பிடலாம். குறிப்பாக குருந்தூர்மலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு சென்றமை தொல்லியலில் அரசியலும், பலம்வாய்ந்த மதவாதிகளும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.
எனவே பல இனங்கள் வாழும் பல சமய கலாச்சார பின்னணியை கொண்ட எமது நாட்டின் கடந்த கால வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் எச்சங்களான தொல்லியல் சின்னங்களை அரசியல், மதம் சார்ந்த தலையீடுகள் அற்ற விதத்தில் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது.
தொல்பொருள் சின்னங்கள் தொடர்பான சட்டம் 1940 ஆம் ஆண்டு 9 ஆம் கட்டளை சட்டமாக ஆங்கிலேயரால் நிறைவேற்றப்பட்டது.அதன் பின்னர் நான்காவது தடவையாக இச்சட்டம் இப்போது திருத்தப்படுகிறது.
இச்சட்டத்தின் அடிப்படையில் ( பிரிவு 48) “தொன்மை” என்பது 1815 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 2 ஆம் திகதிக்கு முந்தியவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறான தொன்மையானவையாக கட்டிடங்கள் (ancient monuments) மற்றும் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆனால் 1998ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் திருத்த சட்டத்தில் முதன்மைச் சட்டவாக்கத்தின் பிரிவு 16 பின்வருமாறு திருத்தப்பட்டது.
அத்திருத்தமானது தொன்மை என்பதன் வரைவிலக்கணமாக “நூறு ஆண்டுகளுக்கு குறையாத காலப்பகுதியொன்றிற்கு இருந்திருக்கின்ற அல்லது அவ்வாறு இருந்திருப்பதாக நம்பப்படுகின்ற சின்னம் எதுவும்” என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இத்திருத்தத்தினூடாக எல்லையில்லா அதிகாரம் துறைசார் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் மூலமாக எந்தவொரு கட்டிடத்தையோ பொருட்களையோ தொன்மையானது என அறிவித்து பிரசுரிக்கும் ஏற்பாடுகளை சட்டத்திலே கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்விடயம் மிகவும் ஆபத்தானது.
வரலாற்று ரீதியாக அல்லது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாமல் ஒரு குறிப்பிட்டதை தொல்லியல் சின்னம் என்று அறிவிப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
எந்தவிதமான நியமத்தின் அடிப்படையில் அவை தொல்லியல் சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் சட்டதில் எதுவும் குறிப்பிடப்படாமல் ஒரு அமைச்சர் தான்தோன்றித்தனமாக தற்துணிவின் அடிப்படையிலே ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தை அல்லது பொருளை அல்லது ஒரு இடத்தை தொல்லியல் சின்னம் என்று அறிவிக்கக்கூடிய ஒரு ஏற்பாட்டை சட்டம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
அதன் அடிப்படையிலேயே குருந்தூர் மலை பிரிவு 16 இன் கீழ் 2013 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி தேசிய பாரம்பரிய அமைச்சர் (minister for national heritage) கலாநிதி ஜெகத் பாலசூரிய அவர்களால் வர்த்தமானி அறிவித்தலில் தொன்மைக்கு உரிய சாதனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவு17 இன் அடிப்படையில் ஒரு மரத்தை அமைச்சர் தொன்மையானதென கருதினால் அம்மரம் தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்தலாம்.
எந்தவிதமான நியமத்தின் அடிப்படையில் அம்மரம் தொல்லியல் சின்னம் என அமைச்சர் அறிவிக்கிறார் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது.
என்ன காரணத்திற்காக இப்பிரிவு உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
வீதியோரங்களில் ஆங்கிலேயரால் நாட்டப்பட்ட அல்லது அதற்குமுன் நாட்டை ஆண்ட அன்னியர்களால் நாட்டப்பட்ட அல்லது பலநூற்றுக்கணக்கான தொன்மையான மரங்கள் அரச திணைக்களங்களாலேயே வெட்டப்படுகின்றபோது யாரிடம் அனுமதிபெற்று வெட்டுகிறார்கள்? அந்த மரங்கள் தொமையானதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா?
சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் (protected monuments) என்ற வகையில் எந்தவொரு அரச அல்லது தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தையும் தொன்மையானதென அமைச்சர் முன்னறிவித்தல் வழங்கி பிரகடனப்படுத்தலாம். அதற்கு ஆட்சேபனைகளை யார் தெரிவித்தாலும் இறுதி முடிவு அமைச்சரின் கைகளிலேயே உள்ளது.
பிரிவு 21 இன் பிரகாரம் எந்தவொரு பாதுகாக்கப்பட்ட கட்டிடத்தின் மீதும் திருத்த வேலை செய்வதாயின் அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பிரிவு 33 இன் கீழ் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமானவர் அரச காணியை காணி ஆணையாளரின் அனுமதியோடு அல்லது அமைச்சரிடமிருந்து அனுமதியை பெற்று அந்த இடத்தை தொல்லியல் காப்பகமாக அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பிரதேசத்தினுள் பொதுமக்கள் எந்தவிதமான செயற்பாடுகளையும் செய்யமுடியாது.
ஒரு அமைச்சர் தான்தோன்றித்தனமாக தற்துணிவின் அடிப்படையிலே ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தை, பொருளை, மரத்தை அல்லது ஒரு இடத்தை தொல்லியல் சின்னம் என்று அறிவிக்கக்கூடிய ஒரு ஏற்பாட்டை சட்டம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதுடன் திணக்களத்தின் பணிப்பாளருக்கும் அளவு கடந்த சட்டரீதியான அதிகாரத்த்தை வழங்கியுள்ளது.
43 ஆவது பிரிவு தொல்லியல் திணைக்களத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அலுவலகம் அமைக்க முடியாதவிடத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமானவர் தனது அதிகாரங்களை மாவட்ட செயலாளர், திணைக்களத்தை சேர்ந்த அதிகாரி, பிரதேச செயலாளருக்கு வழங்கலாம்.
ஆனால் 43:1C இன் கீழ் அகழாய்வு, பேணுகை, மீள் பேணுகை, பராமரிப்பு போன்ற விடயங்களை செய்யக் கூடிய விசேட நிபுணத்துவம் உள்ள எந்தவொரு நபருக்கும் அவர் தனது அதிகாரத்தை வழங்கலாம்.
இவ்விடயம் மிகவும் ஆபத்தானது. இங்கேதான் மதமும் அரசியலும் தலையீடு செய்கிறது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களிலே இவ்வாறான தனி நபர்களுடைய தலையீடுகள் ஏற்கனவே நீதிமன்றம் வரை சென்றிருக்கின்றது.
14.08.2023 அன்று தாக்கல் செய்யப்பட்ட CA 474 /2023 என்ற வழக்கை உதாரணமாக சொல்லலாம்.
இவ்வாறான கசப்பான கடந்தகால சம்பவங்கள் இந்த நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் பாதிக்கக்கூடியவை.
எனவே இவ்வாறான தான்தோன்றித்தனமான அதிகாரங்களும் மத மற்றும் அரசியல் தலையீடும் சட்டதிருத்தத்தினூடாக நீக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.