செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
2025ஆம் ஆண்டிற்கான ஆப்பிரிக்கக் கோப்பை கால்பந்து போட்டியின் வெற்றியாளர்களாக மொராக்கோ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, போட்டி முடிவை ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு (CAF) இரத்து செய்ததன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி 18ஆம் தேதி ரபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், செனகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது.
போட்டி சமநிலையில் இருந்த நிலையில், மேலதிக நேரத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த செனகல் வீரர்கள், ஆட்டத்தை தொடர மறுத்தனர். இதனால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
சுமார் 17 நிமிடங்களுக்கு பின்னர், வீரர்கள் மீண்டும் மைதானத்துக்கு திரும்பினர்.
பின்னர் நடைபெற்றமொராக்கோ வீரர் பிராஹிம் தியாஸின் பெனால்டி தடுக்கப்பட்டதையடுத்து, செனகல் வீரர் பாபே குயே மேலதிக நேரத்தில் வெற்றி கோலை அடித்தார்.எனினும், இந்த முடிவு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை பரிசீலித்த ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் மேல்முறையீட்டு குழு, போட்டி முடிவை இரத்து செய்துள்ளது.
இதன் அடிப்படையில், மொராக்கோ அணிக்கு சாதகமாக 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வழங்கப்பட்டு, செனகல் அணி இறுதிப் போட்டியைத் துறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.மொராக்கோ கால்பந்து சம்மேளனம்தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த முடிவு நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள செனகல் கால்பந்து சம்மேளனம், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளது.