டி20 உலகக் கிண்ணம்: இலங்கை – நியூசிலாந்து மோதல் தீவிரம்.!
டி20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்றில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் இலங்கை அணி இன்று களமிறங்குகிறது. கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டி, இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சுப்பர் 8 சுற்றில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்ததால், தற்போது புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட்டிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகியுள்ளது.
தோல்வியடைந்தால், அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகும்.மறுபுறம், பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் சுப்பர் 8 போட்டி மழையால் கைவிடப்பட்டதால் நியூசிலாந்து அணி ஒரு புள்ளியுடன் உள்ளது. அதனால் அந்த அணிக்கும் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இலங்கை அணி கடந்த போட்டியில் குறைந்த இலக்கை அடைய முடியாமல் தடுமாறியது. துடுப்பாட்ட வரிசையில் தொடர்ச்சியான பலவீனம் காணப்படுவதால், இன்று சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காயம் காரணமாக சில முன்னணி வீரர்கள் இல்லாத நிலையும் அணிக்கு சவாலாக உள்ளது.
பந்துவீச்சு வரிசையிலும் நிலைத்தன்மை தேவைப்படுகின்றது. நியூசிலாந்து அணி வலுவான துடுப்பாட்டத்துடன் களமிறங்கும் நிலையில், இலங்கை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும்.
இரு அணிகளும் இதுவரை பல முறை மோதியுள்ள நிலையில், புள்ளிவிவர ரீதியாக நியூசிலாந்து அணிக்கே மேலாதிக்கம் காணப்படுகிறது. சொந்த மண்ணிலும் இலங்கை அணி அதிக வெற்றிகளைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இன்றைய போட்டி, இரு அணிகளுக்கும் தொடரில் முன்னேறுவதற்கான முக்கியமான மோதலாக அமையும்.