குதிரைப்பந்தய திடலில் பரபரப்பு: பெலிகன்ஸ் வெற்றி.!
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் சுப்பர்–8 சுற்றில் யாழ்ப்பாணம் சென் மேரிஸ் அணியை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெலிகன்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை சோண்டர்ஸ் அணியை தோற்கடித்த சொலிட் அணி, சுப்பர்–8 சுற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
கொழும்பு குதிரைப்பந்தய திடலில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற நான்காவது வாரப் போட்டியில், குருநாகல் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் எட்டாவது நிமிடத்தில் எர்னஸ் எடோ தலையால் கோல் அடித்து முன்னிலை பெற்றார்.
பின்னர் 39ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் பெற்று அணியின் முன்னிலை 2–0 ஆக உயர்த்தினார்.சென் மேரிஸ் அணி பல வாய்ப்புகளை உருவாக்க முயன்றாலும், பெலிகன்ஸ் அணியின் தற்காப்பை தாண்டி பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் பெலிகன்ஸ் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி மற்றும் ஒரு சமநிலை என மொத்தம் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
இதேவேளை, முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் இருந்த அநுராதபுரம் சொலிட் விளையாட்டுக் கழகம், கொழும்பு சோண்டர்ஸ் அணிக்கு எதிராக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதியில் 0–2 என பின்னடைவைச் சந்தித்த போதிலும், இரண்டாம் பாதியில் முழுமையான ஆதிக்கம் செலுத்தியது.
54ஆவது நிமிடத்தில் கோல் அடித்த சொலிட் அணி, 77ஆவது நிமிடத்தில் சமநிலையை ஏற்படுத்தியது. பின்னர் போட்டியின் முழு நேரம் முடிவதற்கு மூன்று நிமிடங்கள் இருக்கும்போது வெற்றி கோலைப் பெற்று, சுப்பர்–8 சுற்றில் தனது முதல் வெற்றியை உறுதிப்படுத்தியது.