ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு: முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை.!
2024ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ. ஜி. எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற பரீட்சையின் மூன்று வினாக்கள் கசிந்ததாகக் கூறி பெற்றோர்கள் குழுவொன்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 2024 டிசம்பர் 31ஆம் திகதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்காக பிரேமதிலக்க தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 3 மில்லியன் நட்டஈடாக அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் என்றும், அது நான்கு வாரங்களுக்குள் முழுமையாக செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், குறித்த நட்டஈட்டுத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அஞ்சன இரத்னசிறி இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இதனை ஆராய்ந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் குழாம், நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.