உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
8 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை மாநகரில் அதிகரிக்கும் குப்பைப் பிரச்சினை.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
94 பார்வைகள்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகைகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

குறிப்பாக, “இறைவனுக்காக இவ்விடத்தில் குப்பை கொட்ட வேண்டாம்”, “தயவுசெய்து இவ்விடத்தில் குப்பை கொட்ட வேண்டாம்”, “நாய்கள் மட்டும் இங்கு குப்பை போடவும்” போன்ற வாசகங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகளைப் பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.

இருப்பினும், இவ்வாறான அறிவுறுத்தல்களையும் மீறி மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதும், அவை நாளுக்கு நாள் குவிந்து வருவதும் பெரும் சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

குப்பைகளை அகற்றுவதற்காக மாநகர சபை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், போதிய பௌதிக வளங்கள், ஆளணி வளங்கள் உள்ளிட்ட குறைபாடுகள் குப்பை முகாமைத்துவ நடவடிக்கைகளுக்குச் சவாலாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சில இடங்களில் நீண்டகாலமாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உரிய நேரத்தில் அகற்ற முடியாத நிலை காணப்படுவதுடன், அவற்றிலிருந்து வீசும் துர்நாற்றம் சுற்றுச்சூழலையும் பாதித்து வருகின்றது.

குறிப்பாக, பொதுமக்களால் கைவிடப்பட்ட காணிகள், வீதியோரங்கள், நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு அண்மித்த இடங்களில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவுவதற்கான அபாயமும் அதிகரிப்பதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது.

தங்களுடைய வீடுகளும் காணிகளும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பும் சிலர், பிறருக்குச் சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் குப்பைகளைக் கொட்டிவிட்டுச் செல்வது அவர்களின் சமூகப் பொறுப்புணர்வின்மையையும் சுயநலப் போக்கையும் வெளிப்படுத்துகின்றது.

மறுபுறத்தில், குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மாநகர சபையின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்களுக்கும் அதில் முக்கியமான பங்குள்ளது.

வீடுகளில் உருவாகும் மக்கும் கழிவுகள் மற்றும் மக்காத கழிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து முகாமைத்துவம் செய்வதற்கான பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, வீட்டுக் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கைப் பசளை தயாரிக்கும் முறையை ஊக்குவிக்க முடியும். இதன் மூலம் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் தேவையான பசளையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று, வீட்டுக் கழிவுகளைப் பயன்படுத்தி பயோகேஸ் எனப்படும் உயிரியல் எரிவாயுவை உற்பத்தி செய்து சமையல் தேவைகளுக்குப் பயன்படுத்தும் முறையும் தற்போது நடைமுறையில் உள்ளது.

மேலும், கால்நடைகளை வளர்ப்பவர்கள் மாட்டுச் சாணம், ஆட்டெரு, கோழிக் கழிவுகள் உள்ளிட்டவற்றைச் சேகரித்து உரிய முறையில் மக்கிய இயற்கைப் பசளையாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.

சிலருக்கு நேர முகாமைத்துவப் பிரச்சினைகள் காரணமாக இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமாக இருக்கலாம். இருப்பினும், வீட்டுக் கழிவுகளை முறையாகப் பிரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதன் மூலம் குப்பைகளின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

எனவே, குப்பைப் பிரச்சினைக்காக மாநகர சபையை மாத்திரம் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. மாநகர சபை தனது குப்பை அகற்றும் சேவைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அதேவேளை, பொதுமக்களும் தங்களுடைய சமூகப் பொறுப்பையும் சுய ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். சுத்தமான மாநகரத்தை உருவாக்குவது மாநகர சபையின் கடமை மட்டுமல்ல; அது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும்.

சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்த்து, கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்து, கல்முனை மாநகர சபையின் தூய்மைப் பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காண முடியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 30,000 ரூபாய் அபராதம் விதிப்பு.!

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொதுச் சுகாதார விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ. 30,000 அபராதத் தொகை சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று விதித்துள்ளது.…

89 0 0
இலங்கை செய்திகள்

மலையகத்தில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்.!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மலையகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ஹட்டன் உள்ளிட்ட பிரதான நகரங்களை…

100 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து; மூவர் உ**யிரிழப்பு.!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில்…

84 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு; “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் போட்டி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில்…

89 0 0