டெல்லியில் கார் காட்சியறை ஒன்றில் பாரிய தீப்பரவல்!
இந்தியாவின் தெற்கு டெல்லியில் அமைந்துள்ள முன்னணி கார் காட்சியறையொன்றில் (Car Showroom) இன்று திடீரெனப் பயங்கர தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியின் சைதுலாஜாப் பகுதியில் அமைந்துள்ள கியா (Kia) கார் காட்சி அறையிலேயே இந்த தீ விபத்து சம்பவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், கட்டடத்தினுள் சிக்கியிருந்த 12க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
தீப்பரவல் தொடர்பில் தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த டெல்லி பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீவிரமாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடி சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கட்டடத்திற்குள் வேறு எவரேனும் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறியத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மின் கசிவு காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.
இந்த அசம்பாவிதத்தில் காட்சி அறையில் வைக்கப்பட்டிருந்த பல கார்கள் தீயில் எரிந்து பலத்த சேதமடைந்துள்ளன.


