ஒவ்வொருவரும் தமது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுகின்றோமா என சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்!
ஆசிரியர் ஒருவரின் உண்மையான வெற்றி, மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துவதில் மாத்திரமன்றி, அவர்களின் மனதில் அன்பையும் நம்பிக்கையையும் உருவாக்கி, பல ஆண்டுகள் கடந்த பின்னரும் நன்றியுடன் நினைவுகூரப்படும் மனிதராகத் திகழ்வதிலேயே தங்கியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் புனிதர் சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (05.11.2026) வியாழக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் கு.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,
அண்மையில் தீவகக் கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றிலிருந்து ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் பெற்றுச் செல்லும்போது, மாணவர்கள் அவரைப் பிரிய மனமின்றி அழுதவாறு வழியனுப்பிய காணொலி சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதனைப் பார்த்தபோது, ஓர் ஆசிரியரின் உண்மையான வெற்றி எத்தகையது என்பதை உணர முடிந்தது.
பாடங்களைக் கற்பித்து, பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துவது மட்டுமன்றி, மாணவர்களின் மனதில் அன்பையும் நம்பிக்கையையும் விதைத்து, அவர்களால் என்றும் நினைவுகூரப்படும் ஒருவராகத் திகழ்வதே ஆசிரியத்துவத்தின் உன்னதமான வெற்றியாகும்.
காலம் மாறியுள்ள நிலையில் ஆசிரியர் – மாணவர் உறவிலும் பல சவால்கள் காணப்படுகின்றன. இருப்பினும், அன்பு, பொறுமை மற்றும் புரிந்துணர்வின் ஊடாக இன்றைய தலைமுறை மாணவர்களின் நம்பிக்கையையும் அன்பையும் ஆசிரியர்களால் பெற்றுக்கொள்ள முடியும். ஆசிரியர்களின் கைகளில் இருப்பது வெறுமனே மாணவர்கள் அல்ல, எதிர்காலச் சமூகமே. எனவே, ஆசிரியப் பணி என்பது ஒரு தொழில் மட்டுமன்றி, ஒரு தலைமுறையை உருவாக்கும் அர்ப்பணிப்புமிக்க சேவையாகும்.
இன்றைய மாணவர்களின் உலகம் வேகமானது. அவர்களது ஆர்வம், சிந்தனை மற்றும் கற்றல் அணுகுமுறைகளைப் புரிந்துகொண்டு கற்பித்தல் முறைகளை மாற்றியமைப்பது அவசியம். அவர்களைக் குறைகூறுவதற்குப் பதிலாக, அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் அன்புடனும் பொறுமையுடனும் வழிகாட்ட வேண்டும்.
கல்வியே தமிழர்களின் அழியாத சொத்து. பணத்தையும் சொத்துகளையும் இழக்க நேரிடலாம். ஆனால், ஒருவர் பெற்றுக்கொண்ட அறிவை யாராலும் அவரிடமிருந்து பறித்துவிட முடியாது. அந்த அறிவுடன் நல்ல பண்புகளையும் தலைமைத்துவத் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும்போதே தனிமனித முன்னேற்றத்திற்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளம் அமையும்.
இந்த நோக்கிலேயே புதிய கல்விச் சீர்திருத்தங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. கல்வி என்பது பாடங்களை மனப்பாடம் செய்து பரீட்சைகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது. சிந்தனைத் திறன், படைப்பாற்றல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல், தொடர்பாடல், குழுவாகச் செயற்படுதல், வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றையும் மாணவர்களிடம் வளர்ப்பதே புதிய கல்வி அணுகுமுறையின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த மாற்றம் ஆசிரியர்களுக்கும் புதிய பொறுப்புகளை ஏற்படுத்துகின்றது. மாணவர்களுக்கு என்ன தெரியும் என்பதைப் பரீட்சிப்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் கற்றுக்கொண்டவற்றை வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்பதற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். புதிய கல்விச் சீர்திருத்தங்களின் வெற்றி வகுப்பறைகளில் ஏற்படும் உண்மையான மாற்றத்திலேயே தங்கியுள்ளது.
மேலும், யாழ்ப்பாண நகரின் தூய்மை தொடர்பில் கவலை தெரிவிப்பதுடன், அதற்கான பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்துவதில் பயனில்லை. ஒவ்வொருவரும் தமது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுகின்றோமா என்பதை முதலில் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எனது குப்பையை உரிய இடத்தில் போடுகின்றேனா, பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கின்றேனா, எனது கடமையைச் சரியாகச் செய்கின்றேனா என்ற கேள்விகளை ஒவ்வொருவரும் தமக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும்.
இதே பொறுப்புணர்வு பாடசாலைச் சூழலிலும் வளர்க்கப்பட வேண்டும். வகுப்பறைகளையும் பாடசாலை வளாகத்தையும் தூய்மையாக வைத்திருப்பதும், பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதும் ஒவ்வொரு மாணவரினதும் கடமையாகும். மற்றவர்களை மதித்தல், தவறுகள் நிகழும்போது பொறுப்பேற்றல் மற்றும் சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக வாழ்தல் ஆகியவையும் கல்வியின் முக்கியமான பகுதிகளாகும். மாணவர்கள் உயர்ந்த பெறுபேறுகளைப் பெறுபவர்களாக மட்டுமன்றி, உயர்ந்த பண்புகளைக் கொண்ட மனிதர்களாகவும் உருவாக வேண்டும்.
இப்பாடசாலையின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கம் ஆற்றிவரும் பங்களிப்பையும் ஆளுநர் பாராட்டினார்.
பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சியில் பழைய மாணவர்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது. தமது அறிவு, அனுபவம் மற்றும் வளங்களை இன்றைய மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டு பாடசாலையின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும். 150ஆவது ஆண்டு சிறப்பு மலரும் பாடசாலையின் வரலாற்றையும் சாதனைகளையும் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்தும் முக்கிய ஆவணமாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் விழாவைச் சிறப்பித்தன. மேலும், பாடசாலையின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விசேட மலர் வெளியீடும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி, கலாசார மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.இரதீஸ்வரன், யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன், பழைய மாணவரும் பொலிஸ் பரிசோதகருமான இ.சியாளன் மற்றும் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் முன்னை நாள் ஆசிரியர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.








