ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு; “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் போட்டி.!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காம பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முஸர்ரப் முதுநபின், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், இறக்காம பிரதேச சபையின் தவிசாளர் முஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாற்பதாண்டு கால அரசியல் மற்றும் சமூகப் பயணத்தைக் கொண்டாடும் வகையிலும், பிராந்திய இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் வகையிலும் இக் கிரிக்கெட் தொடர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







