உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பல்வேறு பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
80 பார்வைகள்

மனிதவளத்தைப் பயன்படுத்தி நேரடியாக அரச சேவைகள் வழங்கப்பட்ட காலத்தில் அதிகாரிகளிடம் காணப்பட்ட மனிதநேய அணுகுமுறையும் சேவைகளை விரைந்து வழங்கும் பண்பும், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கணினிமயமான சேவைகள் நடைமுறைக்கு வந்துள்ள தற்போதைய சூழலில் குறைந்துள்ளமை கவலைக்குரியது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

அலுவலர்களுக்குக் காலத்துக்குக் காலம் பயிற்சிகள் வழங்கப்படுவது அவர்களின் திறன்களை மேம்படுத்தி, மக்களுக்கான சேவைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்குவதற்கே எனக் குறிப்பிட்ட ஆளுநர், அந்த இலக்கை அடைவதற்கு இன்னும் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகின் ஏற்பாட்டில், பல்வேறு பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (04.11.2026) புதன்கிழமை பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாண சபையின் சில முக்கிய திணைக்களங்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்துள்ளன. இருப்பினும், ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்துக்கு நேரடியாகக் கோவையைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, வழமைபோன்று தபாலில் அனுப்பிவிட்டு அதற்காகக் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. இத்தகைய நடைமுறைகள் சேவைகளில் தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்துகின்றன.

அலுவலர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவர்களுக்குரிய பதவி உயர்வுகள் உள்ளிட்ட நிர்வாக விடயங்களையும் உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். அவர்களது கோவைகளை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதிலும் தாமதங்கள் ஏற்படக்கூடாது. மக்களுக்கு அதிகாரிகள் எவ்வாறு சேவையாற்றுகின்றார்களோ, அதேபோன்று அதிகாரிகளின் தேவைகளையும் நிர்வாகம் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

அலுவலர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதன் நோக்கம், மாறிவரும் உலகின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களைத் தயார்ப்படுத்துவதாகும். அந்தப் பயிற்சிகளின் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவையும் திறன்களையும் தமது அன்றாடப் பணிகளில் பயன்படுத்தி, மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும். அரச சேவையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அலுவலர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரச அலுவலகங்களில் அலுவலர்களும் திணைக்களத் தலைவர்களும் புதிய சிந்தனைகளைச் செயற்படுத்துவதற்கும், புத்தாக்க முயற்சிகளை முன்னெடுப்பதற்கும், தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கும் தயக்கம் காட்டுவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். வேலை செய்யாமல் இருப்பதால் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மை மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஒருவர் செயற்படும்போது, அதிலும் சரியான முறையில் பணியாற்றும்போது விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம். சமூக ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழலாம். அவற்றைக் கண்டு அஞ்சிச் செயற்படாமல் இருப்பதைவிட, உரிய பொறுப்புணர்வுடன் பணியாற்றுவது அவசியம். அவ்வாறு விமர்சனங்களை எதிர்கொள்வது சில சந்தர்ப்பங்களில் ஒருவர் சரியான முறையில் செயற்படுவதற்கான அடையாளமாகவும் அமையலாம் என ஆளுநர் குறிப்பிட்டார்.

பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதுடன் பயிற்சி முடிந்துவிடக் கூடாது. அந்தப் பயிற்சிகளின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அறிவும் திறனும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் தெளிவாக வெளிப்பட வேண்டும். அதுவே இத்தகைய பயிற்சிகளின் உண்மையான பெறுபேறாக அமையும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில், பெறுகை நடைமுறையும் ஒப்பந்த நிர்வாகமும், பொதுநிதி முகாமைத்துவம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய சான்றிதழ் கற்கைநெறிகளையும், பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறியையும் பூர்த்தி செய்த 193 அலுவலர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்), முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகின் பணிப்பாளர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காலிமுகத்திடல் தாக்குதல் : தென்னக்கோன், ஜோன்ஸ்டன் உட்பட 37 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கொழும்பு, காலிமுகத்திடலில் 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், முன்னாள் நாடாளுமன்ற…

75 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

ஆரம்ப பாடசாலை மாணவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற ஒரு முச்சக்கர வண்டி வாகனம் 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த நான்கு…

79 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு!

டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Digital & AI) தொழில்நுட்பங்களைப் பொதுத்துறையில் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு இன்று (4) புதன் கிழமை…

74 0 0
இலங்கை செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசனத்துறை கப்பல் சேவை: நவம்பர் மாதத்திற்கான சிறப்பு கட்டணக் குறைப்பு மற்றும் சலுகைகள் அறிவிப்பு!

நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசனத்துறை (KKS) இடையே இயக்கப்படும் ‘சுபம் ஃபெர்ரி’ (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர்…

87 0 0