மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்
மயிலத்தமடு பிரச்சனையைப் பொறுத்தவரையிலே இனவாதத்தைத் தூண்டுகின்ற வகையிலே, அதாவது தோல்வியடைந்த ஒரு அரசியல் கலாச்சாரத்துக்குள் இருக்கிறவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக இந்த பிரச்சனையை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளர் கிருஷ்ணகோபால் திலகநாதன் தெரிவித்தார்.
மயிலத்தமடு மாதவனை என்ற பிரச்சனையை அரசாங்கம் மிக சுமுகமாக இதனை எடுத்துச் செல்வதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் தற்போது செய்திருக்கின்றது. ஆகவே பண்ணையாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் இவற்றை சரியாக அவர்களுக்கு பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் இன்றையதினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளர் கிருஷ்ணகோபால் திலகநாதன், உதவி அரசாங்க அதிபர் பிரணவன்,மகாவலி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள்,பொலிஸார் என பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் அப்பகுதியில் பண்ணையாளர்கள் தாக்கப்படுவதாகவும் மாடுகள் தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த திலகநாதன்,
“தற்போதைய சூழ்நிலையில் மயிலத்தமடு பிரச்சனை சம்பந்தமாக இன்றைய தினம் எங்களது அரசாங்க அதிபர் அவர்கள் தலைமையிலே மகாவலி அதிகார சபை, பொலிஸ் திணைக்களம் இன்று தற்போது இருக்கின்ற சூழ்நிலைகள் சம்பந்தமாகவும் அங்கே ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலைகள் சம்பந்தமாகவும் நீண்ட நேரம் கலந்தாலோசிக்கப்பட்டது. அந்த வகையிலே பண்ணையாளர்கள் அங்கு தனது கால்நடைகளை வைத்துக்கொள்வதற்கு ஏற்பட்டிருக்கின்ற இடையூறுகள் சம்பந்தமாகவும் இன்று நாங்கள் கலந்துரையாடினோம்.
உண்மையில் இந்த மயிலத்தமடு இந்த பிரச்சனையை வெளியிலே இருக்கின்ற ஒரு அணி இவர்களை இயக்குவதை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. உண்மையிலேயே பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற சில பிரச்சனைகள் சம்பந்தமாக அரசாங்கம் ஒரு தீர்வினை தந்திருக்கிறது.
அந்த வகையிலே மயிலத்தமடுவிலே 1,570 ஏக்கரை விடுவிக்க வேண்டும் என்கின்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலே எந்தவொரு மாற்றமும் இல்லை.
அது சம்பந்தமாகவும் கடந்த பாராளுமன்ற கூட்டத்திலும் எங்களது அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் மிக தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார். ஆகவே இது ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒருசில நிர்வாக ரீதியான தடங்கல்கள் காரணமாக இன்றும் அவை கிடைக்கப்பெறாமல் இருக்கிறது.
ஆகவே அவற்றினை விரைவுபடுத்துவதற்கு தேவையான கள சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அறிகின்றோம் அங்கு மயிலத்தமடு பகுதியிலே பண்ணையாளர்களுக்கு சில இடையூறுகள் ஏற்படுவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
ஆகவே அந்த தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பாரிய பிரச்சனைகளாக எடுத்துக்கூறப்பட்டாலும், அங்கிருக்கின்ற உண்மையான நிலவரங்கள் பற்றி பொலிசாரிடம் நாங்கள் வினவியபோது முறையான முறையிலே சில முறைப்பாடுகள் இடம்பெறவில்லை என்பதை அவர்கள் தெரிவித்திருந்தார்கள். இன்றைய கலந்துரையாடலின் போதும் அவர்கள் அது சம்பந்தமாக கதைத்திருந்தார்கள்.
யாரோ ஒருவரின் தூண்டலின் அடிப்படையிலே அவர் தாக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
ஆகவே அதற்கு நீதியான ஒரு விசாரணையை செய்யுமாறு அரசாங்க அதிபர் அவர்களால் கோரப்பட்டது. அதனை பொலிசாரும் ஏற்றுக்கொண்டு நீதியான விசாரணை அதற்காக செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாக பண்ணையாளர்கள் அங்கு தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சில சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவினை இட்டிருந்தார்கள். அந்த விடயம் சம்பந்தமாகவும் கலந்தாலோசித்தோம்.
அந்த விடயத்திற்கு முழுமையாக பொலிஸ் அதற்கு பொறுப்பினை எடுத்திருக்கிறது. மயிலத்தமடு பகுதியிலே இப்போது ஒரு பொலிஸ் செக்பாயிண்டிலே ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டிருக்கின்றார். 15க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலே ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. அங்கொரு வாகனம் வழங்கப்பட்டிருக்கிறது, நான்கு மோட்டார்பைக்குகள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையிலே அந்த பிரதேசத்துக்கு பண்ணையாளர்களின் உயிருக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்கின்ற நிலையை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தார்கள்.
தொடர்ச்சியாக அவர்களுக்கு மேச்சல் தரை சம்பந்தமாக ஒரு பிரச்சனை இருப்பதாக எங்களுக்கு அறியக் கிடைத்தது. ஆகவே அந்த மேச்சல் தரை சம்பந்தமாக தற்போது நாங்கள் கலந்தாலோசித்து வருகின்றோம். அதற்கு ஏற்கனவே 1,500 ஏக்கர் விடுவிக்கப்படுவதாக தீர்மானித்து மகாவலி அதற்குரிய அறிக்கையினை சமர்ப்பித்திருந்தது.
அந்த வகையிலே தற்போது அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களால் பயிர் செய்யப்படுகின்ற இடங்களைத் தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் இந்த கால்நடைகளை வைத்துக்கொள்ளலாமா என்பது சம்பந்தமாக நாங்கள் கலந்துரையாடினோம். அந்த வகையிலே வெகுவிரைவாக அந்த இடங்களை அடையாளப்படுத்தி பண்ணையாளர்களுக்கு நாங்கள் ஆரம்பக் கூட்டத்திலே முடிவுகளை எடுத்தது போல அங்கு கால்நடைகளை செல்வதற்கு ஏற்றவாறான இடங்களை அடையாளப்படுத்துகின்ற வேலைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
வெகுவிரைவிலே இரண்டொரு நாட்களுக்குள் அதற்கான இடங்களை அடையாளப்படுத்தி நாங்கள் அதற்குரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம். உண்மையிலேயே இந்த மயிலத்தமடு பிரச்சனையைப் பொறுத்தவரையிலே இனவாதத்தைத் தூண்டுகின்ற வகையிலே, அதாவது தோல்வியடைந்த ஒரு அரசியல் கலாச்சாரத்துக்குள் இருக்கிறவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக இந்த பிரச்சனையை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றார்கள். நாங்கள் அறிகின்றோம் நாளைய தினம் ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.
உண்மையிலேயே அரசாங்கம் இதனை பண்ணையாளர்களுக்கு கொடுப்பதற்கு தீர்மானித்திருக்கின்ற அந்த சந்தர்ப்பத்திலே ஏன் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க வேண்டும் என்கின்ற ஒரு கேள்விக்குறி இருக்கிறது.
இதற்கு பின்னால் சில அரசியல்வாதிகளும் தோல்வியடைந்த அரசியலில் இருக்கின்றவர்களும், அதேபோல் வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர் அமைப்புகளிலிருந்து தங்களுக்கு வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கின்ற சில அணிகளும் ஒன்றிணைந்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்களைச் செய்து அவர்கள் இந்த நிலத்தை அரசாங்கம் நிச்சயமாகத் தரும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஏனைய காலங்களில் இருந்த அரசாங்கங்களைப் போல் அல்லாமல் இந்த அரசாங்கம் மக்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொண்ட, அதேபோல் பண்ணையாளர்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம் தற்போது இருக்கின்றது.
ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டம் இன்று கிராம மக்கள் வரை அது வியாபித்திருக்கிறது. ஆகவே அவர்களுக்குத் தெரியும் இந்த நிலம் நிச்சயமாக பண்ணையாளர்களுக்குக் கிடைக்கும் என்று. ஆகவே இதனை அறிந்த இந்த பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல்வாதிகள் தாங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் இதனை பெற்றுக்கொடுத்தோம் என்பதைக் காண்பிப்பதற்கான ஒரு நாடகத்தைத்தான் திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே நாங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றோம், இந்த மயிலத்தமடு மாதவனை என்ற பிரச்சனையை அரசாங்கம் மிக சுமுகமாக இதனை எடுத்துச் செல்வதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் தற்போது செய்திருக்கின்றது. ஆகவே பண்ணையாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் இவற்றை சரியாக அவர்களுக்கு பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்திருக்கின்றோம்.
அத்துமீறி அந்த இடத்திலே விவசாயம் செய்திருக்கின்ற ஒரு சூழ்நிலையிலே சில குழப்பகரமான சூழ்நிலையை மிகப்பெரியதாக பூதாகரமாக மாற்றி, அதன் மூலம் அரசியல் லாபம் எடுக்கின்ற இந்த சில கூட்டம் இதனை மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே நாங்கள் பண்ணையாளர்களுக்கு மிக தெளிவாக குறிப்பிடுகின்றோம், ஆகவே நீங்கள் அவசரப்பட தேவையில்லை. உங்களுக்காக உங்களுக்கான அந்த பிரதேசத்தில் கால்நடைகளை வைத்துக்கொள்வதற்கு தேவையான சாதகமான நிலைப்பாட்டை எங்களால் தரக்கூடியதாக இருக்கும்.”
“அதாவது ஏற்கனவே ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், அந்தத் தீர்ப்பு மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. மேல்முறையீடு செய்யப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலே அந்த இடத்திலே இருக்கின்றவர்களின் தங்களது இடத்தின் உரிமையினை உறுதிப்பாடு செய்யும்படி நீதிமன்றம் கேட்டிருந்தது. ஆகவே அந்த அறிக்கையினை தயாரித்து தற்போது மகாவலி அந்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு வழங்கியிருக்கிறது. அதன் தீர்ப்புகள் வந்த பிறகு சட்டரீதியாக அவர்கள் அகற்றப்படுவார்கள்.
அதற்கு சில காலம் அவகாசம் தேவைப்படுகிறது. அதற்கான சட்ட நடவடிக்கைகளை மகாவலி அதிகார சபை தற்போது எடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு நிச்சயமாக அவர்கள் அந்த இடத்திலிருந்து சட்டரீதியாக அகற்றப்படுவார்கள்.
இப்போது குறிப்பிடப்படுகின்றது, அந்த அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் மாடுகளைச் சுடுவதாகவும் பல முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. அந்த முறைப்பாடுகள் உண்மையில் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்த பிறகு வந்த முறைப்பாடுகள் அல்ல.
காலம் காலமாக மாடுகள் அந்த பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட பிறகு தொடர்ச்சியாக அதுவொரு வேறொரு கும்பல் அந்த மாடுகளைச் சூறையாடி விற்பனை செய்கின்ற வேறொரு கும்பல் இருக்கிறது. இது தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கின்றன. அந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் பொலிஸ் நிலையத்திலே முறைப்பாடுகள் செய்த வரலாறு இருக்கிறது.
ஆகவே இதனை பண்ணையாளர்கள் மிக கவனமாக தங்களது கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய ஒரு சூழ்நிலையும் இருக்கிறது. இது சம்பந்தமாக பொலிசாருடனும் நாங்கள் சில கலந்துரையாடல்களையும் செய்திருக்கின்றோம். இதற்கான மாற்று ஏற்பாடுகள் தற்போது நாங்கள் செய்துகொண்டு வருகின்றோம்.
உண்மையிலேயே அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் சில பிரதேசங்களிலே பயிர் செய்திருக்கின்ற நிலைமை உண்மை. ஆனாலும் அதனைத் தாண்டி கிட்டத்தட்ட 3,000 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பு இருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.
இது சம்பந்தமான கள ஆய்வு நடவடிக்கை ஒன்றை வெகுவிரைவிலே இரண்டொரு நாட்களுக்குள் ஏற்பாடு செய்வதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கின்றோம். ஆகவே வெகுவிரைவிலே அந்த பண்ணையாளர்களுக்கு அந்த மேச்சல் தரை போன்று ஒரு பிரதேசத்தை அடையாளப்படுத்துவதற்கான முயற்சியிலே தற்போது நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.” என்றார்.










