காவன்திஸ்ஸ யானைக்கு உருவச்சிலை அமைக்கும் பணிகள் ஆரம்பம்
அண்மையில் உயிர்நீத்த ‘காவந்திஸ்ஸ’ யானையின் தத்ரூபமான உருவச்சிலையை நிர்மாணிப்பதற்கும், வன யானைகள் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தத் திட்டம் அம்பன்பொல, கஹம்பிலியாவெட்டியாவத்த பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் தோட்டத்தில் நிறுவப்படவுள்ளது.
உயிரிழந்த ‘காவந்திஸ்ஸ’ யானை தலைமை தாங்கிய ‘கஹல்ல-பல்லேகலை’ யானைக் கூட்டம் அடிக்கடி நடமாடும் நிலப்பரப்பிற்கு மிக அருகில் இத்தோட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் காவந்திஸ்ஸ யானையின் தத்ரூபமான சிலையுடன் ஆராய்ச்சி மற்றும் நூலக வளாகமும் அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வன யானைகள் மற்றும் தந்த யானைகள் பற்றிய ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், நாட்டில் நிலவும் யானை-மனித மோதலைத் தணிப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால இலங்கைச் தலைமுறையினரின் நலனுக்காக யானைகளைப் பாதுகாத்தல் போன்ற முக்கிய திட்டங்களை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


