பொலிஸ் காவலில் உ**யிரிழந்த சந்தேகநபர்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்.!
கொபேகனே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த வேளையில் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சந்தேகநபரின் சம்பவம் தொடர்பில், அப்பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் தங்களது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமைக்காகவே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
25 ஆம் திகதி பிற்பகல் கொபேகனே, பெத்தேகம பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரைப் பிரதேசவாசிகள் பிடித்து கொபேகனே பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இரண்டு நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், 27 ஆம் திகதி இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
குறித்த மரணத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பிரதேசவாசிகள் ஐவர் கொபேகனே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
சந்தேகநபரைக் கைது செய்து மரத்தில் கட்டி வைத்து ஒரு மணி நேரம் கடப்பதற்குள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கி, அவரைப் பாதுகாப்பாகப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவருக்குத் தாக்குதல் எதுவும் நடத்தப்பட்டிருந்தால், அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவரை கைது செய்யப்பட்ட அந்தப் பிரதேசவாசிகள் விடுவிக்கப்படவில்லையென்பதுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


