முல்லைத்தீவில் காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேட உலங்கு வானூர்தியை பயன்படுத்த நடவடிக்கை!
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி காலை கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மூவரும் இதுவரை கரைதிரும்பவில்லை.
காணாமல்போனவர்கள் முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையைச் சேர்ந்த 26 வயதுடைய அன்ரனி ஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஸ்ரீ புஷ்பராஜா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 48 வயதுடைய முகம்மட் ரிஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடலில் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தேடுதல் பணிகளில் சவால்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை வான்படையின் உலங்கு வானூர்தியைப் பயன்படுத்தி நாளை (28) காலை முதல் வான்வழித் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணாமல்போன மூவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.


