உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
82 பார்வைகள்

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ், இணைந்த நேர அட்டவணைக்கு அமைவான நெடுந்தூரப் பேருந்துச் சேவைகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாண நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நகரின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அனைத்துப் போக்குவரத்துச் சேவை வழங்குநர்களும் இப்பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநரை, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,
பல ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இதுவரை முழுமையாகச் செயற்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல், சுகாதார சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டே அனைத்துத் தரப்பினரதும் இணக்கத்துடன் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராமை தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்ததுடன், அது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளுக்கு அமைவாகவே இன்று இங்கிருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு இப்பேருந்து நிலையம் முழுமையாகச் செயற்படுவது அவசியம் எனத் தெரிவித்த ஆளுநர், போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் அனைத்துத் தரப்பினரும் இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக இங்கிருந்து சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு இணங்கிச் செயற்படாத தரப்புக்களுக்கு எதிராக உரிய பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பத்து நகரங்களை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நகரம் அபிவிருத்தி செய்யப்படும்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனவும், பல தசாப்தங்களுக்கு முன்னர் காணப்பட்ட தூய்மையான நகரச் சூழலை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன்,
நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே இன்றைய தினம் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இதற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட இணைந்தநேர அட்டவணையில் தொடர்புடைய இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். எனவே, இச்சேவைகளை முன்னெடுப்பதற்கு இணங்க மறுக்கும் தரப்புக்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன், கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழா.!

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான தகைமை அடிப்படை மற்றும் முதல் இரண்டு மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு வடமாகாணம்,…

1 0 0
இலங்கை செய்திகள்

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவு கொழும்புக்கு வருகை.!

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவைச் (1TS) சேர்ந்த ‘திர்’ (Tir), ‘சுஜாதா’ (Sujata) ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்களும், ‘சாரதி’ (Sarathi) என்னும் இந்தியக் கடலோர…

76 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்…

71 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை…

80 0 0