ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!
ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்கி, உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைச் சென்றடைவதற்கும், அவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும் வருமானமும் கிடைப்பதற்கும் கரும்பறவை (Blackbird OTT) தளம் வழிவகுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார்.
ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கரும்பறவை ஓடிடி தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார்கோவிலடியில் அமைந்துள்ள ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், ஈழத் தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கும் உள்ளூர் படைப்பாளர்களின் படைப்புகள் சர்வதேச அளவில் சென்றடைவதற்கும் இத்தகைய தளங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனக் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் ஈழத் தமிழ்த் திரைத்துறை தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருந்ததையும், திரைப்படங்களும் பாடல்களும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்ததையும் நினைவுகூர்ந்த ஆளுநர், தென்னிந்தியக் கலைப்படைப்புகளை ரசிப்பதில் தவறில்லை என்றாலும், அவற்றைப் பாராட்டும்போது எமது சொந்தக் கலைகளை மறந்துவிடக்கூடாது என வலியுறுத்தினார்.
ஈழத் தமிழ்க் கலைஞர்களிடம் திறமை இல்லாதது பிரச்சினையல்ல, அவர்களது படைப்புகள் பரந்துபட்ட பார்வையாளர்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகளும், தொடர்ந்து படைப்புகளை உருவாக்குவதற்கான பொருளாதார ஆதரவும் சந்தை வாய்ப்புகளும் போதுமான அளவில் இல்லாமையே முக்கிய சவாலாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். உலகெங்கும் உள்ள பார்வையாளர்களிடம் திரைப்படங்களையும் தொடர்களையும் கொண்டு சேர்க்கும் ஓடிடி தளங்கள், இக்குறையை நிவர்த்தி செய்வதற்குப் பங்களிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
ஈழத்துத் திரைப்படங்கள் போரை மட்டும் மையப்படுத்தியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், போர் எமது வரலாற்றின் ஒரு பகுதி என்றாலும், அதற்கு அப்பாலும் எமக்கென்று தனித்துவமான வாழ்வியல் உள்ளது என்றார். மக்களின் மகிழ்ச்சி, காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள், இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களது கனவுகள் மற்றும் சமூகம் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் என எமது வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் படைப்புகள் வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
கதை, நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, தொழில்நுட்பம் மற்றும் திரைக்கதை என அனைத்துத் துறைகளிலும் சர்வதேசத் தரத்தை நோக்கி உள்ளூர் கலைஞர்கள் முன்னேற வேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், கலைத்தரத்துடன் பார்வையாளர்களைக் கவரும் தன்மையும் படைப்புகளில் இருக்க வேண்டும் என்றார். கலையையும் வணிகத்தையும் இணைப்பதில் தவறில்லை; வணிக நோக்கத்துக்காகக் கலையின் தரத்தைக் கைவிடுவதுதான் தவறு என்றும் குறிப்பிட்டார்.
தரமான உள்ளூர்ப் படைப்புகளை ஆதரிப்பதில் பார்வையாளர்களுக்கும் பொறுப்பு உள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், சிறந்த படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதுடன், அவற்றைப் பார்ப்பதற்கான நியாயமான கட்டணத்தையும் செலுத்துவது படைப்பாளர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் பொருளாதார மதிப்பை வழங்கும் எனக் கூறினார்.
புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் தாயகத்தில் உருவாகும் திரைப்படங்களையும் பாடல்களையும் தமக்குப் பொருத்தமான நேரத்தில் பார்ப்பதற்கும், எமது மண்ணின் கலைஞர்களுடன் தொடர்பைப் பேணுவதற்கும் கரும்பறவை ஓடிடி தளம் உதவ முடியும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். இத்தளம் ஈழத் தமிழ்த் திரைத்துறைக்குப் புதிய சந்தையை உருவாக்குவதுடன், கலைஞர்களுக்கு வருமானம் கிடைக்கவும் புதிய தயாரிப்பாளர்கள் உருவாகவும் வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் துணைச் செயலாளர் மதிகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆசிரியரும் இளங்கலைஞருமான பா.இரமணாகரன், ராஜா கிறீம் ஹவுஸ் உரிமையாளர் சி.சண்முகானந்தன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். சம்பத் வங்கி யாழ்ப்பாணக் கிளையின் முகாமையாளர் ராஜசாந்தன் பெயர்ப் பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்தார். கரும்பறவை ஓடிடி தளத்தின் இயக்குநர் ச.சர்மன் அறிமுக உரையாற்றினார். ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் தலைவரும் மருத்துவ நிபுணருமான எஸ்.சிவன்சுதன் அவர்களும் நிகழ்வில் பங்கேற்றார்.






