ஆலையடிவேம்பில் நவராத்திரி விழா கோலாகலம்!
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஊர்வலமும் கலை நிகழ்வுகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.
ஆலையடிவேம்பு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சங்கரி கிருஷ்ணகுமாரின் ஒருங்கிணைப்பில், கலாசார அலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்வின் ஆரம்பமாக, ஆலையடிவேம்பு கலைமகள் அறநெறிப் பாடசாலை மற்றும் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம், ஆலையடிவேம்பு வம்மியடி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமானது.
அங்கிருந்து ஆலையடிவேம்பு மத்திய வீதி வழியாகச் சென்ற ஊர்வலம், ஆலையடிவேம்பு முருகன் ஆலய அறநெறிப் பாடசாலை மண்டபத்தைச் சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து, அதிதிகள் வரவேற்பு, மங்கள விளக்கேற்றல் மற்றும் அறநெறிக் கீதம் இசைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து, மாணவர்களின் கலைத் திறன்களையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், அறநெறிக் கல்வியில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களும் பெறுமதிமிக்க பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் கலந்துகொண்டார். மேலும், ஆலையடிவேம்பு சமுர்த்திப் பிரிவு உத்தியோகத்தர் வி. சுகிர்தகுமார் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலையடிவேம்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான சர்மிலா, சங்கரி உள்ளிட்டோரும் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
சமயப் பண்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதுடன், இளைய தலைமுறையினரிடையே அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களின் ஆன்மிகப் பண்புகளையும் கலைத் திறன்களையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.





















