அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.!
பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கடந்த 6 வருடங்களுக்கு மேலாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை பட்டதாரி ஒன்றியத்தின் தலைவர் க.அனிரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டில் இனம், மதம், மொழி என எவ்வித வேறுபாடுமின்றி சட்டம் அனைவருக்கும் பொதுவானது எனும் நிலைப்பாட்டைத் தற்போதைய அரசாங்கம் நிலைநாட்டி வருகின்றது. தவறுகள் இழைக்கப்படும் போது அரசியல் தராதரங்களின்றி சட்டம் தன் கடமையைச் செய்வது பாராட்டுக்குரியது.
இருப்பினும், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வித்துறையையும், பல்கலைக்கழக பட்டம் முடித்து சேவையாற்றும் பட்டதாரிகளையும் நோக்கும் போது, அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஒருபக்கச் சார்பாக அமைந்துள்ளனவோ என்ற கேள்வி எழுகின்றது. இது கடந்த கால அரசியல் பழிவாங்கல்களின் தொடர்ச்சியா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.
கடந்த கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் போது நாடளாவிய ரீதியில் 53,000 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு, முறையான பயிற்சிக்குப் பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் பணிகளை ஆற்றி வருகின்றனர். அவர்களை நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு சேவைப் பிரமாணக் கோவை தடையாக இருப்பதாகக் கடந்த காலங்களிலும் தற்போதும் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பல்கலைக்கழகங்களில் கல்வியியல் பட்டம் முடித்தவர்களை நேரடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்காக ஆசிரியர் சேவைப் பிரமாணக் கோவையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கௌரவ பிரதமர் அறிவித்துள்ளார்.
கல்வியியல் பட்டதாரிகளுக்காகச் சேவைப் பிரமாணக் கோவையை மாற்ற முடியுமென்றால், 6 வருட காலக் கற்பித்தல் அனுபவத்தைக் கொண்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், எந்தவொரு முரண்பாடுகளுமின்றி மிக விரைவில் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டில் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆசிரியர் போட்டிப் பரீட்சைகள் மூலம் மட்டுமே அனைவருக்குமான நியமனங்களை உறுதிப்படுத்த முடியாது என்றார்.
எனவே, பட்டதாரிகளின் எதிர்காலத்தையும் அவர்களின் நீண்டகாலக் கனவுகளையும் கருத்தில் கொண்டு, வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் அரச சேவைக்குள் உள்வாங்குவதற்கான முறையான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையின் இலவசக் கல்வி முறைமைக்காகப் பெருமளவு நிதி செலவிடப்பட்ட போதிலும், சரியான தொழிற்துறை திட்டமிடல் இல்லாததால் கல்வியினால் நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் பூஜ்ஜியமாகவே உள்ளது எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
எனவே, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஆகியோர் பட்டதாரிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை உடனடி கவனத்தில் கொண்டு, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆசிரியர் நியமனம் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கான பணி நியமனங்கள் தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை பட்டதாரி ஒன்றியம் சார்பில் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.