உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

நாடாளுமன்றப் பெரும்பான்மை இருந்தாலும் மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் : சஜித் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
21 பார்வைகள்

ஜனாதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மை பலமும் அரசுக்குக் காணப்பட்டாலும், மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு -பொல்துவ சந்தியில் நடத்தவுள்ள அமைதி வழியிலான ஆர்ப்பாட்டம் குறித்து, ஐக்கிய மகளிர் சக்திக்கும் ஐக்கிய கலைஞர்கள் சக்திக்கும் தெளிவூட்டும் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“22 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக நாட்டின் கௌரவமிக்க நீதித்துறையானது நிறைவேற்று அதிகாரத்தின் கட்டளைகளுக்கு அடிபணியச் செய்யப்படுவதுடன், நீதித்துறையின் சுதந்திரமும் இறையாண்மையும் இல்லாமலாக்கப்பட்டு நிறைவேற்றுநர் பலப்படுத்தப்படுகின்றார்.

நீதிமன்றத்தின் கனம் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை மாற்றுவது மக்கள் இறையாண்மையைப் பாதிக்கும் என்பதால், இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும்.

மக்கள் இறையாண்மையை அழித்தொழித்து, நாட்டில் ஹிட்லர் ஆட்சியைப் போன்ற ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி அரசு நாட்டை நகர்த்தி வருகின்றது.

கடந்த காலத்தில் நிலக்கரி மோசடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தபோது அது நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தாலும், தற்சமயம் வலுச்சக்தி அமைச்சரும் செயலாளரும் அந்தப் பதவிகளில் இல்லை.

மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும். இதே மக்கள் பலத்தின் காரணமாகவே 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி கூட வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது.

22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜே.வி.பி. உறுப்பினரான சட்டத்தரணி விஜயநாயக்க உட்பட பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கங்களும், சர்வதேச சமூகத்தின் பல தரப்பினரும் இதற்கு எதிராகத் தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

நாட்டில் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2023 ஆம் ஆண்டு அறிக்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது பற்றிப் குறிப்பிடப்படவில்லை.

நீதித்துறையின் மேலாண்மையை இல்லாமலாக்கி, பலகட்சி முறையை ஒழித்துவிட்டுத் தனிக் கட்சியினர் மாத்திரம் ஆட்சி செய்யும் முறையை நோக்கி அரசு செல்ல முற்படுகின்றது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 24 ஆம் திகதி பொல்துவ சந்தியில் நடைபெறும் அமைதிப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் மண் சரிவு!

இன்று மதியம் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் மஸ்கெலியா பிரதான சாலையில் வனராஜா கெந்தகொளை கிறிஸ்தவ தேவாலயம் பகுதியில் பாரிய மண் சரிவு காரணமாக ஹட்டன் பொகவந்தலாவ…

25 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை! : அமைச்சர் கே.டி. லால்காந்த மறுப்பு!!

தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த…

8 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் : வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. இப் பகுதியில் உள்ள…

22 0 0
இலங்கை செய்திகள்

புதிய அரசமைப்பை உருவாக்கும் வாக்குறுதியில் மாற்றமே இல்லை! – நீதி அமைச்சர்  உறுதி

நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், கொடூரமான…

32 0 0