உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

வவுனியா – அலியாமருதமடுக் குளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உயர்மட்ட சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
31 பார்வைகள்

வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அலியாமருதமடுக் குளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் பல்வேறு முறைப்பாடுகளை ஆராய்ந்து, அவற்றுக்கு ஒழுங்குமுறையானதும் நிரந்தரமானதுமான தீர்வை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அலியாமருதமடுக் குளம் தொடர்பில் சிலரால் தொடர்ச்சியாக பல்வேறு அரச திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பிரச்சினையின் உண்மை நிலையை நேரில் ஆராய்ந்து, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். அதற்கமைவாக, நேற்று செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், வவுனியா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர், கிராம அலுவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் குளப்பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது, தனிநபர் ஒருவரால் ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இடையூறுகள் தொடர்பில் பொதுமக்களாலும் பொது அமைப்புக்களாலும் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அரச திணைக்களங்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகச் செயற்படாமல் தன்னிச்சையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் ஏனைய விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக, காலபோகச் செய்கைக்கான கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்னரே தன்னிச்சையாக விதைப்பு மேற்கொள்ளுதல், போலிச் சாவியைப் பயன்படுத்தி நீர்ப்பாசனத்துக்கான நீரைத் திறந்து விடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொதுமக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனுடன், வனவளத் திணைக்களத்துடன் தொடர்புடைய ஆக்கிரமிப்பு மற்றும் காணி ஆவணப் பிரச்சினைகள், அப்பகுதியின் வீதிகளின் மோசமான நிலைமை மற்றும் போக்குவரத்துச் சேவை இல்லாமை ஆகிய விடயங்களும் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அலியாமருதமடுக் குளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து வவுனியா மாவட்டச் செயலகத்தில் அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது இதுவரை இடம்பெற்ற நடவடிக்கைகள், முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் தனிநபரால் ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

குறித்த தனிநபரின் பெயரில் பதிவுகளில் அண்ணளவாக 70 ஏக்கர் வரையான காணி காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன்,
“ஏழைகள் என்பதற்காக அந்த மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அவர்களுக்குரிய காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பல்வேறு யோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, முன்னாயத்தப் பயிர்ச்செய்கைக் கூட்டத்தை நீர்ப்பாசனத் திணைக்களம் நடத்தி, அதனைத் தொடர்ந்து காலபோகச் செய்கைக் கூட்டத்தை நடத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும், வயல் காணிகளின் பதிவுகளுக்கு அமைவாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், குளத்தின் கீழான காணிகளைச் சுவீகரித்து, அவற்றை உரிய முறையில் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிப்பதன் மூலம் தீர்வை ஏற்படுத்துவது தொடர்பான யோசனையும் முன்வைக்கப்பட்டது.

இந்த அனைத்து விடயங்களையும் மேலும் தீவிரமாக ஆராய்ந்து, சட்டரீதியான, நிர்வாக ரீதியான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற நிலையான தீர்வொன்றை எட்டுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத் சந்திர, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவசிறி, மேலதிக மாவட்ட செயலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் மற்றும் கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தீவிரமடையும் எல் நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை.!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல் நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான…

41 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் கோலாகலமாக ஆரம்பமான உள்ளூராட்சி வார நிகழ்வுகள்.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச…

32 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்; வனஜீவிகள் அலுவலகம் அமைக்க திட்டம்.!

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின்…

9 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

மித்தெனிய, மகாக்கொட்டுவ பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (15) ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய மித்தெனிய…

44 0 0