கொழும்பு, ஸ்டேடியம்கம ‘Port View Residencies’ புதிய அடுக்குமாடி வீடமைப்புத் தொகுதி மக்களிடம் கையளிப்பு.!
கொழும்பு நகர்ப்புற மக்களுக்கு சிறந்த வீடமைப்பு வசதிகளை வழங்கி வைக்கும் நோக்கில், கொழும்பு 14, கிராண்ட்பாஸ், ஸ்டேடியம்கம பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “Port View Residencies” அடுக்குமாடி வீடமைப்புத் தொகுதி இன்று (15.09.2026) மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகர்ப்புற வளர்ச்சி பிரதி அமைச்சர் இரங்க குணசேகர உள்ளிட்ட பல முக்கிய அழைப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது தகுதிபெற்ற பயனாளிகளுக்கு உரிமப்பத்திரங்களும் வீடுகளுக்கான சாாவிகளும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சின் வளர்ச்சித் திட்டமிடலுக்கு அமைவாக, நகர்ப்புற வளர்ச்சி அதிகாரசபையின் வழிகாட்டலில் கொழும்பு நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்திற்கு ஆதரவளிக்கும் திட்டத்தின் (SCURP) மூலம் இந்த வீடமைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
9,866 மில்லியன் ரூபாய் மொத்தச் செலவில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) கடன் உதவியின் கீழ் பெறப்பட்டுள்ளது.
15 மாடிகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் திட்டத்தில், தலா 500 சதுர அடி பரப்பளவைக் கொண்ட 1,000 வீட்டு அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
குடியிருப்பாளர்களின் அன்றாட மற்றும் பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சுகாதார மையம், சமூகக் கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம், பொலிஸ் சாவடி, கிராம நிலதாரி அலுவலகம், தீயணைப்புப் பிரிவு, சூப்பர் மார்க்கெட், சிறுவர் பூங்கா மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இது கட்டப்பட்டுள்ளது.
மேலும், சுற்றியுள்ள வீதிப் பின்னல் மற்றும் கால்வாய் அமைப்புகளை அபிவிருத்தி செய்தல், புதிய சமூகக் கூடத்தை அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துதல் போன்ற விரிவான உள்கட்டமைப்புப் பணிகளும் இத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இத்திட்டம், நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவில் தடைப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
இங்குள்ள 1,000 வீடுகளில் 250 வீடுகளுக்கு இன்று குடியிருப்பாளர்கள் குடியேற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 750 வீடுகளிலும் அடுத்த 8 மாதங்களுக்குள் கட்டம் கட்டமாக மக்கள் குடியேற்றப்படுவர் என்றும் தெரிவித்தார்.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அனைத்துக் குடியேற்றங்களும் முழுமையாக நிறைவு செய்யப்படும் எனக் கூறிய அமைச்சர், இப் புதிய வீடமைப்புத் தொகுதியைச் சிறப்பாகப் பராமரித்து எடுத்துச் செல்வதற்குப் பயனாளிகளைக் கொண்ட சமூகக் குழுக்களை அமைத்து, தொடர்ச்சியான பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் நஜித் இந்திக, கொழும்பு மாநகர சபை முதல்வர் விராய் கெல்லி பல்தசார், பிரதி மேயர் ஹேமந்த வீரகோன், நகரசபை உறுப்பினர்களான எஸ். சுதாகர், சாமர பெரேரா, அமைச்சின் மேலதிக செயலாளர் தரணி கமகே, நகர்ப்புற வளர்ச்சி அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் எம்.ஜி. ஹேமச்சந்திர, அதன் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் தமித் திஸாநாயக்க, இணைப்பக்க மேலாண்மை அதிகாரசபையின் தலைவர் கிரிஷன் நாநாயக்கார, அதன் பொது முகாமையாளர் கபில பிரியந்த, SCURP திட்டப் பணிப்பாளர் டி.எம்.சி. பண்டார உள்ளிட்ட அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், பயனாளிகளின் குடும்பத்தினரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.



