வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்; வெளியான அதிர்ச்சி காரணம்.!
கொழும்பு தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், தந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எச்.ஏ. துமிந்த கிஹான் (11) மற்றும் எச்.ஏ. கசுன் ரஷ்மிக (17) ஆகிய இரு சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த அவர்களின் தந்தையான 55 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி, களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
தாய் கைவிட்டுச் சென்ற நிலையில், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்த இச்சிறுவர்கள், தாக்குதல் நடந்த வேளையில் வீட்டின் முன் பகுதியில் மெத்தையொன்றில் தந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தபோதே இத்துயரம் சம்பவித்துள்ளது.
இன்று அதிகாலை 3.10 மணியளவில் சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர், வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து இக்கைக்குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகநபர் தப்பிச்செல்லும் காட்சிகள் அருகிலுள்ள வீடொன்றின் CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த தந்தையின் நிலைமை தீவிரமாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் நான்கு மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக மேல் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான வீட்டிற்கு அருகாமையிலுள்ள வீடு, காயமடைந்த நபரின் சகோதரருக்குச் சொந்தமானதாகும். அவரின் மூத்த மகன், ‘படோவிட்ட அஸங்க’ எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் கும்பலுடன் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தற்போது படோவிட்ட அஸங்க, அவிஷ்க மற்றும் ‘கொஸ் மல்லி’ ஆகிய ஆயுதமேந்திய குழுக்களுக்கிடையே தெஹிவளை, கொஹுவலை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்கள் மற்றும் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியிலேயே இச்சம்பவமும் நடந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்கிஸ்ஸ மேலதிக நீதிவான் ஹேமமாலி ஹால்பந்தெனிய, கள ஆய்வுகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை உடனே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களைக் கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டிரோன் ரத்நாயக்க மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

