வல்வெட்டித்துறையில் சட்டவிரோத விடுதி தொடர்பில் பரபரப்பு
வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் விடுதி ஒன்று உரிய சட்ட அனுமதிகள் இன்றி இயங்கி வருவதுடன், கரையோரப் பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறி கடலுக்குள் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகர சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதுவரித் திணைக்களம் உள்ளிட்ட துறைகளின் சட்ட வரையறைகளுக்கு முரணாக குறித்த விடுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த விவகாரம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்றும் பலர் குற்றம் சுமத்தினர்.
இதேவேளை, வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு 25 ஏக்கர் காணி வழங்கப்பட்டு, சுற்றுலா கவர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த திட்டம் தொடர்பில் பிரதேச மக்களுடன் இணைந்து அந்தப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு, இந்திய முதலீட்டுத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் இன்று காலை 9.45 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது வீதி அமைப்பதற்கான அனுமதிகள், எல்லை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், பருத்தித்துறை அஞ்சல் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியிலிருந்து இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பது, ஆனைவிழுந்தான் பகுதியில் நீதிமன்றத்திற்கு காணி வழங்குவது உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அரச திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் செயலாளர், வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் செயலாளர், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், இராணுவம், காவல்துறை மற்றும் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.