களு கங்கையில் நீராடச் சென்ற 19 வயது இளைஞர் மாயம் – தேடும் பணிகள் தீவிரம்
களுத்துறை, ஹொரண – நாரகல பாலத்திற்கு அருகாமையில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று நண்பர்களில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
யால பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், கங்கையில் குதித்து நீந்த முயன்றபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு நண்பரும் நீரோட்டத்தில் சிக்கிய நிலையில், போராடி பின்னர் கரை சேர்ந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர்காப்புப் படையினர் களு கங்கையில் காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நீரோட்டம் மிகவும் வேகமாக இருப்பதுடன், முதலைகளின் நடமாட்டமும் அதிகமாகக் காணப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அச்சமடைந்த உள்ளூர் மக்களும், காணாமல் போன இளைஞரின் நண்பர்களும் நேற்றிரவு முழுவதும் கங்கைக் கரையில் தீ மூட்டி, இளைஞர் தொடர்பான தகவலுக்காக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.