சாய்ந்தமருதில் வியாபாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு
சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வியாபாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (01) சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம். மதனின் நேரடி வழிகாட்டலிலும் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள், மளிகைக் கடை மற்றும் சில்லறை வியாபாரிகள், மருந்தக உரிமையாளர்கள், அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில், புலனாய்வு உத்தியோகத்தர் இசட்.எம். ஸாஜீத் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான வர்த்தக நடைமுறைகள் தொடர்பில் விரிவான விளக்கங்களை வழங்கினார்.
இதன்போது, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம், பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்துதல், நுகர்வோருக்கு பற்றுச்சீட்டு வழங்குதல், பொருட்களின் லேபிள் மற்றும் காலாவதி திகதி விதிமுறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.