நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்; அரச நிதி மோசடி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய மாகாண ஆளுநரும் கலந்து கொண்டார்.
நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தலைமையிலான ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் அனுஷா திலகரத்ன விஜயரத்ன உள்ளிட்ட மத்திய மாகாண அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் முக்கியமாக நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நிதி மோசடிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நோர்வூட் பிரதேச செயலாளரிடமிருந்து கிடைத்த கடிதத்தின் அடிப்படையில், நிதி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துமாறு மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கப்பட்டதாக கூட்டத் தலைவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த வழக்கு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 2 கோடியே 59 இலட்சத்து 41 ஆயிரம் அஸ்வெசும நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், மோசடி செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை தனது சொந்த வங்கி கணக்கு, கணவரின் வங்கி கணக்கு மற்றும் சகோதரரின் வங்கி கணக்கு ஆகியவற்றுக்கு மாற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த மோசடி நடவடிக்கையில் சுமார் 11 பேர் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
தலவாக்கலையிலும் அஸ்வெசும நிதி மோசடி
இதேபோன்று தலவாக்கலை பிரதேச செயலகத்திலும் அஸ்வெசும நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் 9 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டதாக தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதில் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் தொடர்புபட்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், அவரது வங்கி கணக்கிற்கு 2 இலட்சம் ரூபாய் பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதன்படி, இதுவரை கண்டறியப்பட்ட மொத்த மோசடி தொகை ரூ.11 இலட்சத்து 16 ஆயிரமாக இருப்பதாகவும், விசாரணைகள் தொடரும் நிலையில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குறித்த நிதியின் ஒரு பகுதி சில ஆசிரியர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்
இதனுடன், நுவரெலியா மாவட்டத்தில் வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்தல், வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்தல், நீர்ப்பாசனம் தொடர்பான திட்டங்கள், “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் மற்றும் புதிய வீடமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாவட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை முறையாக முன்னெடுப்பது தொடர்பிலும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.