இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!
கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து, சுமார் மூன்றரை ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகலை பகுதியினைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயாபுரம்’ வீட்டுத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மலையக மக்கள் எமது சகோதர மக்கள் என்ற வகையில் இந்நாட்டின் பூரண உரிமைகளையும் வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பல நூற்றாண்டுகளாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அவர்களின் பிள்ளைகளுக்கும் உரித்தாக்குவது நியாயமற்றது என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்யும்போது மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவுகளை அந்த ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.
நமது நாட்டின் இதயமாகக் கருதப்படும் மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான பொறுப்புகளை வகிக்கும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரங்களை ஒருங்கிணைத்து, முழுமையான அதிகாரங்களைக் கொண்ட மத்திய மலைநாட்டுப் பாதுகாப்பு அதிகாரசபையை அமைப்பதற்கான சட்டத்தை இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்த இந்தக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு, தமக்கென்று இடம் மற்றும் கௌரவமான வாழ்க்கையை உரித்தாக்கும் நோக்கத்துடன் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
10 பேர்சஸ் காணி மற்றும் 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட முழுமையான 50 வீடுகள் இத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறை ஆகியவற்றைக் கொண்ட இந்த ஒவ்வொரு வீட்டின் செலவும் சுமார் 32 இலட்சம் ரூபாவாகும். அத்துடன், புதிய வீடுகளில் குடியேறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தளபாடங்கள், சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 175,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பத்து பயனாளிகளுக்கு அடையாள ரீதியாக வீடுகளின் திறப்புகள் மற்றும் உரிமைப் பத்திரங்கள் வழங்குவது ஜனாதிபதி தலைமையில் இங்கு இடம்பெற்றது.
மேலும், 4000 இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
‘நவோதயாபுரம்’ வீட்டுத் திட்டத்தை நிர்மாணிப்பதில் காணிகளை செப்பனிடுதல் முதல் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டுதல், வீடுகளை உறுதியாக நிர்மாணிக்கும் பணிகள் முடியும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணி வழங்கிய தீவிர மற்றும் சிறப்பான பங்களிப்பைக் பாராட்டி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
வீட்டுப் பயனாளிக் குடும்பங்களின் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் உரையாற்றுகையில்,
”இன்றைய தினம் இந்தப் பிரதேச மக்களுக்கு ஒரு விசேடமான நாளாக அமையும் என நான் நினைக்கின்றேன். இருநூறு வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக வருகை தந்த இந்த மலையக மக்கள் எமது சொந்த இலங்கைச் சமூகத்தின் ஒரு அங்கமாவார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்போது வந்தார்கள் என்பது முக்கியமல்ல.அது வரலாறு.
ஆனால் இன்று எமது நாட்டில் பிறந்து, எமது நாட்டின் பொருளாதாரத்தில் பங்கெடுத்து, இந்த மண்ணில் பிணைந்து வாழும் இந்த மக்கள் எமது நாட்டின் விசேட உரிமைகளைக் கொண்ட ஒரு மக்களாவர். இருநூறு வருடங்களுக்கும் மேலான காலமாக, அவர்களுக்குத் சொந்தமாக ஒரு நிலத்துண்டு கூட இல்லாத, இந்தத் தாய்நாட்டில் உரிமையற்ற ஒரு சமூகமாகவே வாழ்கிறார்கள். தமக்கென்று ஒரு வீடு கூட இல்லாத மக்கள் அவர்கள். எமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் குறைந்தபட்சம் ஐந்து அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக வேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம். வாழுவதற்கொரு வீடு, வருமான வழி, பிள்ளைகளுக்கான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் மன அமைதி என்பன அவையாகும்.
ஆனால் நாம் இந்த மக்களிடம் கேட்டால், அவர்களின் முகங்களைப் பார்த்தால், அவர்களின் துன்பங்களுக்குச் செவிசாய்த்தால், இந்த ஐந்து விடயங்களில் எத்தனை விடயங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன? எனவே தற்போதைய எமது அரசாங்கத்தின் சவாலும், எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பும் என்னவென்றால், இந்த அனைத்து மக்களுக்கும் தேவையான அந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதே ஆகும். அதற்காக நாங்கள் பல வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.” – என்றார்.










