பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!
சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இந்திய பிரஜைகள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியப் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 33 வயதான ஆண் ஒருவர் இந்தியாவில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வருபவர் எனவும், 38 வயதான பெண் இந்திய பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் சீனாவில் இருந்து குறித்த சிகரெட் தொகையை கொள்வனவு செய்து, அங்கிருந்து சிங்கப்பூர் சென்று பின்னர் சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான SQ-468 விமானத்தில் இன்று அதிகாலை 12.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்திருந்த மூன்று பயணப் பொதிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பொதிகளில் மொத்தம் 278 சிகரெட் கார்ட்டூன்களில் 55,600 சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (25) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்தமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
