திருக்கேதீஸ்வரத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற முயற்சி – சத்தியலிங்கம் எம்பி வெளிப்படுத்தல்!
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருட்திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வெளிக்கொணர்ந்தார்.
இன்று (13.08.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே இவ்விடயத்தினை வெளிப்படுத்தினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருட்திணைக்களம் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் இரவு நேரத்தில் இது தொல்பொருட்திணைக்களத்திற்குரிய இடமென்று பெயர்ப்பலகை நாட்டியுள்ளது.
அந்த பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் ஒரு அபிவிருத்தியும் மேற்கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறு இரவு நேரத்தில் இவ்வாறு செய்ய முடியும்.
இந்த ஆலயம் பாடல் பெற்ற திருத்தலமாகும். ஆலயச்சூளல் தொல்பொருளுடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைப்பதாக உள்ளது.
குறித்த ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படாமல் முற்றிலுமாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியுமா என கேட்க விரும்புகிறேன்.
ஏற்கனவே அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்த இடங்களில் சில பதாகைகள் தொல்பொருட்திணைக்களத்தால் நாட்டப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலதிகமாகவே இவை தற்போது யாருக்கும் அறியப்படுத்தப்படாமல் நாட்டப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த விடயத்தினை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.