தேசிய நலன்களை முன்னிறுத்தும் வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்ற வேண்டும் – சஜித் வலியுறுத்தல்
பாரம்பரிய அணிசேரா கொள்கையிலிருந்து விடுபட்டு, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான இணக்கப்பாடுகளை’ அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் மக்களுக்குப் பயனளிப்பதற்கும் இயலுமானவரை அதிகளவான நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஆக்கபூர்வமான உறவுகளைக் கட்டியெழுப்புவதை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
தேசிய நலன்களைப் பாதுகாக்கும், பொருளாதார இராஜதந்திரத்தை வலுப்படுத்தும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மற்றும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடத்தைத் திறம்படப் பயன்படுத்தும் ஒருங்கிணைந்த மற்றும் முனைப்பான வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டுக் கொள்கையை மதிப்பீடு செய்வதற்கான 12 முக்கிய விடயங்களை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச ஒத்துழைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை, வர்த்தகம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அத்துடன், சார்க் (SAARC), பிம்ஸ்டெக் (BIMSTEC) மற்றும் இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கம் (IORA) போன்ற பிராந்திய அமைப்புகளின் ஊடாக வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்துமாறும், கடல்சார் வளங்களைப் பாதுகாத்து நிலையான அபிவிருத்தியை ஊக்குவிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கொள்கை வகுத்தல் மற்றும் செயற்படுத்தலை மேம்படுத்துவதற்காகப் புதிய நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் சிந்தனைக் குழாம்கள் ஊடாக நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை தீர்மானம் எடுக்கும் செயன்முறையை நவீனமயப்படுத்த வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்தார்.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், இலங்கையின் தேசிய நலன்களை முன்னேற்றும் மற்றும் நாட்டின் 22 மில்லியன் மக்களுக்கும் பயனளிக்கும் சர்வதேச முன்னெடுப்புகளுக்கு எதிர்க்கட்சி ஆக்கபூர்வமான ஆதரவை வழங்கும் எனவும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.


