இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு.!
இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் இணைந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போதே இந்தக் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 77 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பைபர் படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தமிழகம் – மண்டபம் இந்தியக் கடலோரக் காவல்படை முகாமில் வைத்து மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


