“ஹரக் கட்டா” உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பயங்கரவாத வழக்கை முன்னகர்த்த முடியாது! – நீதிமன்றம் அதிரடி!!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகக் கூறி, “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை தொடர்ந்து முன்னகர்த்திச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மற்றும் சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.