பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி; சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழப்பு.!
முச்சக்கர வண்டி பள்ளத்தில் தடம்புரண்டதில் காயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 22 ம் திகதி காலை 7.30 மணிக்கு நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான சாலையில் மஸ்கெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோகினி எல்ல நீர்வீழ்ச்சி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் கந்தசாமி செல்வம் (வயது 46), அதன் சாரதி ராமலிங்கம் திவாகரன் (வயது 26), ஆர்.எம்.விஸ்வதிவங்கர (வயது 13) மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன், மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் கல்வி பயிலும் செல்வம் கம்ஷிகா (வயது 16), மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி டக்ஷனா (வயது 13) ஆகியோர் சிக்கியிருந்தனர்.
இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி ராமலிங்கம் திவாகரன், கந்தசாமி செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கந்தசாமி செல்வம் என்பவரின் மகள் டக்ஷனா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.