காட்டுக்குள் மக்களை குடியமர்த்த திட்டம்; அதிகாரி மீது குற்றச்சாட்டு.!
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. டென்சியா கிரிதரன் தொடர்பில் தினகரனுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள காணிகளை மக்களுக்கு பயனுள்ள இடத்தில் வழங்காமல் புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கோம்பாவில் திம்பிலி எனும் காட்டுப் பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணிகளுக்குப் பதிலாக புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் உள்ள காணிகளை அல்லது புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தன் செல்லும் வீதியில் அமைந்துள்ள வெண்புறா என அழைக்கப்படும் யுத்தத்தின் பின்னர் இராணுவ முகாமாக்கப்பட்ட அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கினால் போக்குவரத்து, மருத்துவம், கல்வி, வங்கிச் செயற்பாடுகள் போன்ற அனைத்து வசதிகளையும் இலகுவாக பெற முடியும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடங்களில் காணிகளை வழங்கினால் புதுக்குடியிருப்பானது பொருளாதார மற்றும் சமூக ரீதியாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடையும் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. டென்சியா கிரிதரனிடம் கேட்ட போது “தாங்கள் தருவது தான் காணி இல்லையெனில் காணி இல்லை” என மிரட்டல் தொனியில் கூறியுள்ளார். இதனால் அவருடன் கதைக்க மக்கள் பயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு இதற்குரிய தகுந்த தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.