மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!
மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற உயர் மட்டக் கலந்துரையாடலில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் , ஜெகதீஸ்வரன் மற்றும் வட மாகாண கல்விப்பணிப்பாளர், வலய கல்விப்பணிப்பாளர், பாடசாலையின் அதிபர், பாடசாலை பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை அதிபரை மாற்றக்கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக தீர்க்கமான முடிவு எட்டப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவர்கள் மீண்டும் வழமைபோன்று பாடசாலைக்கு செல்வதற்கு பெற்றோர்கள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




