சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ள அச்சங்கம், நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொட விதாரணவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில், நாடாளுமன்ற சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்து இத்தகைய பொய்யான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது கவலைக்குரியது.
நீதித்துறையின் சுதந்திரத்தையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கௌரவத்தையும் பாதுகாப்பதில் நாட்டின் சட்டச் சமூகம் என்றும் உறுதியுடன் ஒன்றுபட்டு நிற்கும்.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள், முறையான நிறுவனத் தேவை மற்றும் அனைத்துப் பங்குதாரர்களின் பரந்த கலந்தாய்வுகளுக்கேற்பவே கொண்டுவரப்பட வேண்டுமே தவிர, தற்காலிக சூழ்நிலைகளுக்காகவோ அல்லது அவசர கோலத்திலோ மேற்கொள்ளப்படக் கூடாது.
எந்தவொரு அரசு ஆட்சியில் இருந்தாலும், ஜனநாயகம், நீதித்துறைச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காகச் சங்கம் தொடர்ந்தும் குரல்கொடுத்து வந்துள்ளதுடன், நாம் எப்போதுமே அரசியல் செய்ததில்லை. இனிமேலும் செய்யப்போவதில்லை.
நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற பாதுகாப்புக் கவசத்தைத் தவிர்த்து, இக்குற்றச்சாட்டுகளைப் நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாகக் கூறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொட விதாரணவுக்குச் சவால் விடுக்கின்றோம். அவ்வாறு கூறும் பட்சத்தில் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றுள்ளது.