புதுக்குடியிருப்பில் வீதியை ஆக்கிரமித்துச் சட்டவிரோத கட்டிடம்:அதிகாரிகள் மௌனம் காப்பதாக மக்கள் கொந்தளிப்பு!
புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கா வீதியும் பாண்டியன் வீதியும் சந்திக்கும் நாற்சந்தியான மாம்பழம் சந்தி என்று பலராலும் கூறப்படும் சந்தியில் புதுக்குடியிருப்பு முன்னாள் தவிசாளர்
ஆ. தவக்குமார் அவர்களின் மச்சானான தீபன் வீதிக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் கடையின் முன்பகுதியினை கட்டி வருகிறார் என தினகரனுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் கோம்பாவில் பிரதேசசபை உறுப்பினர் க.ஜெயசுதாகரன், பிரதேசசபை செயலாளர் கிருசாந்தன் மற்றும் தவிசாளர் கரிகாலன் ஆகியோருக்கு அறிவித்தும் மேற்படி சட்டவிரோத கட்டிட வேலை தடுத்து நிறுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த சட்டவிரோதமான கட்டிட நிர்மாணத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப அலுவலகத்தில் பணிபுரியும் ஆனந்தமூர்த்தி முரளிதரன் என்பவர் உடந்தையாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
‘கட்டிடத்தை பிரதேச சபை அகற்றச் சொல்லும் போது அகற்றுவேன்’ என ஒரு கடிதத்தை சட்டவிரோத செயற்பாட்டாளரான தீபனிடம் இருந்து முரளிதரன் பெற்று கோவையில் வைத்துவிட்டு அனுமதி வழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்படுகிறது.
ஆனந்தமூர்த்தி முரளிதரன் என்பவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காணிப் பிரிவில் வேலை செய்துகொண்டிருந்தபோது பல ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பில் வீதி அமைப்புகளிலும், வீதிகளை அகலப்படுத்தும் செயற்பாடுகளிலும் கட்டிடங்களை அமைப்பதிலும், A-35. பரந்தன் முல்லைத்தீவு வீதியில் கடைகளை வீதியின் ஓரம் வரை அமைப்பதிலும் புதுக்குடியிருப்பின் முன்னாள் தவிசாளர் ஆதவக்குமார், இன்நாள் தவிசாளர் கரிகாலன், பிரதேசசபையின் செயலாளர் கிருசாந்தன், ஆ.முரளிதரன் ஆகியோர் பல இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
புதுக்குடியிருப்பு பிரதேசசபை கோம்பாவில் துர்க்கா வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டிடத்தை நீக்கி போக்குவரத்து இடர்பாடுகளை தீர்க்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள பிரதேச சபை செயலாளர் விசாரணைகள் மேற்கொண்டு இந்த ஊழலினை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.