நான்கு இலட்சம் மக்களை எழுபதாயிரமாகக் காட்டி உணவைத் தடுத்தது பாரிய போர்க்குற்றம்.!
“முள்ளிவாய்க்காலில் மிகச் சிறிய நிலப்பரப்பில் எமது மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட அந்த இனவழிப்பு நாட்களை நாங்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று பருத்தித்துறை – முனைப் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அஞ்சலி செலுத்தி உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்ததாவது:-
“முள்ளிவாய்க்கால் பகுதியில் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருந்தபோது, வெறும் 70 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாகக் கூறி உணவைத் தடுத்தது இலங்கை அரசு செய்த பாரிய போர்க்குற்றமாகும்.
குண்டு வீச்சுகளுக்கு மத்தியிலும் பசி, பட்டினியால் எமது மக்கள் அல்லல்பட்டனர். ஓர் அகப்பைக் கஞ்சிக்காக ஏங்கி நின்ற அந்த நாட்களை நினைவுபடுத்தவே 17 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வை முன்னெடுக்கிறோம்.
இந்த நினைவேந்தல் இன்றுடன் முடிந்துவிடக் கூடாது. எமது எதிர்கால சந்ததியினரும் இந்த வரலாற்றைத் தொடர்ந்து நினைவு கூர வேண்டும்.
இறுதிப் போரின் போது எமது மக்கள் சிறிய கடற்கரைப் பரப்புக்குள் முடக்கப்பட்டிருந்த அவலத்தை நினைவுகூரும் வகையில் பருத்தித்துறை முனையில் இந்த அஞ்சலி நிகழ்வை நடத்துகின்றோம்.” – என்றார்.
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், வடமராட்சி தெற்கு மேற்கு மற்றும் பருத்தித்துறை பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதுடன், கஞ்சிப் பகிர்விலும் பங்கேற்றனர்.